2 July 2008

சுழலும் கட்டடம் - துபாயில் இன்னொரு அதிசயம்!

|3 comments
மேற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக, துபாயில் சுழலும் கட்டடம் ஒன்று உருவாகி வருகிறது. இந்த கட்டடம், ஒரு வாரத்தில் 360 டிகிரி அளவுக்கு சுழலக் கூடியது. இதனால் தினசரி ஒரு கோணத்தில் துபாயை தரிசிக்க முடியும்.

உலக மக்களின் மனம் கவர்ந்த நகரமான துபாயில், கட்டடக் கலையில் பல்வேறு அற்புதங்கள், சாதனைகள் படைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய சாதனையாக சுழலக் கூடிய கட்டடம் ஒன்று உருவாகி வருகிறது.

இந்த கட்டடத்தில் ஒரு சதுர அடி இடம், குறைந்தபட்சம் 6000 திர்ஹாம் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தத் திட்டத்திற்கான இயக்குநர் தவ் சிங் கூறுகையில், இக்கடட்டத்திற்கு டைம் பீஸ் பில்டிங் என பெயரிட்டுள்ளோம். சூரியனை அடிப்படையாக வைத்தும், அறிவியல் பூர்வமான கற்பனையின் அடிப்படையிலும் இந்த கட்டடம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

7 நாட்களில் 360 டிகிரி அளவுக்கு இந்த கட்டடம் சுழலும் வகையில் அமையும். இதன் மூலம் இந்த கட்டடத்தில் இடம் பெறும் அனைத்து அலுவலங்களும் ஒவ்வொரு நாளும் ஒரு கோணத்தில் இருக்கும்.

கட்டடம் சுழல்வதை அதில் குடியிருப்போர் உணர முடியாத அளவுக்கு மிக மிக மெதுவான சூழற்சியாக இருக்கும்.

ஆகஸ்ட் மாதத்தில் இதன் கட்டுமானப் பணி தொடங்கி 2010ம் ஆண்டில் முடிவடையும்.

இந்தக் கட்டடத்திற்கான விற்பனை பிரசாரம் டெல்லி, நியூயார்க், பிராக், மாஸ்கோ, ஹாங்காங்கில் நடைபெறும்.

மொத்தம் 80 மாடிகளைக் கொண்ட இந்த சுழலும் கட்டடத்தின் ஒவ்வொரு தளமும் ரூ. 3000 கோடி செலவில் உருவாக்கப்படுகிறது. உலகப் புகழ் பெற்ற இத்தாலி நாட்டு கட்டடக் கலை நிபுணர் டேவிட் பிஷர் இதை வடிவமைத்துள்ளார் என்றார்.

1 July 2008

பங்கு சந்தையில் லாபம் சம்பாதிப்பது எப்படி???

|0 comments
முதலீட்டில் லாபம் கிடைக்க வேண்டுமானால், மொத்த முதலீட்டையும் ஒரே இடத்தில் போடாமல் சரியான துறைகளைத் தேர்வுசெய்து பிரித்துச் செய்யவேண்டும். அப்போதுதான் ஒன்று சரிந்தாலும் மற்றொன்று கைகொடுக்கும். அவ்வாறு ஒரு கலவையாக முதலீடு செய்வதுதான் முதலீட்டுக்கலவை.

அதை எப்படி உருவாக்குவது?

''பங்கு முதலீட்டுக் கலவை ஒன்றை உருவாக்க குறைந்தபட்சம் 2 முதல் 4 லட்சம் ரூபாய் போதுமானது. இந்தப் பங்கு முதலீட்டுக் கலவையில் குறைந்தபட்சம் 20 முதல் 25 பங்குகளாவது இருக்கவேண்டும். பங்கு முதலீட்டுக் கலவையை உருவாக்க துறைகளின் அடிப்படையிலே முதலீடுகளை அமைத்துக்கொள்வது நல்லது. துறைகளைப் பொறுத்தவரை நீண்டகாலத்தில் வளர்ச்சி கொண்டவை. ஆனால், எப்போதும் எல்லாத் துறையும் வளர்ச்சியில் இருக்காது. இவை ஒரு சுழற்சியின் அடிப்படையில் மாறிமாறி வரும். முதலீடு செய்யும்போது தற்போது எந்தத் துறைகள் வளர்ச்சிப் பாதையில் உள்ளது எனப் பார்க்கவேண்டும். அதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களாகத் தேர்வு செய்யவேண்டும். இது எளிமையாக இருக்கும்.

உதாரணமாக, இரண்டு லட்சம் ரூபாய் முதலீடு என்றால், அதனை பத்து துறைகளில் கலந்து முதலீடு செய்யலாம். ஒரு நிறுவனப் பங்கில் அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் முதலீடு என இருபது பங்குகளில் முதலீடு செய்யலாம். அவ்வாறு தேர்வு செய்யும் நிறுவனங்கள் அத்துறையில் மிகச்சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களாக இருக்கவேண்டும். சந்தை சரிவின்போது இவற்றின் விலைகளும் சரிந்தாலும், மற்ற பங்குகளைவிட விரைவில் மீண்டும் அதிகரிக்கும்.

அல்லது நிறுவனங்களின் அடிப்படையில் சந்தையில் உள்ள பத்து பெரிய நிறுவனப் பங்குகளில் 50 சதவிகிதம் முதலீடு செய்யலாம். மீதமுள்ள 50 சதவிகிதத்தை பி.எஸ்.இ-500 பிரிவில் உள்ள சிறந்த 10 பங்குகள் என பங்கு முதலீட்டுக் கலவையை உருவாக்கலாம்.

தேர்வு செய்துள்ள நிறுவனப் பங்கு-களின் விலை எப்போது குறைவாக உள்ளதோ, அப்போதுதான் முதலீட்டை துவக்கவேண்டும். கையில் பணம் இருப்பதற்காக அவசரப்பட்டு ஏதாவது ஒரு பங்கில் முதலீடு செய்யக்கூடாது. பொறுமை அவசியம் தேவை. குறிப்பாக சரியும் சந்தையில் நம்மால் சிறந்த பங்கு முதலீட்டுக் கலவை ஒன்றை உருவாக்கிக் கொள்ளமுடியும். அந்தவகையில் இப்போதுள்ள சந்தை முதலீட்டாளர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு.

ஒரு நிறுவனப் பங்குக்கு பத்தாயிரம் ரூபாய் என்று முடிவாகிவிட்ட நிலையில், அவற்றை ஒரே தவணையில் முதலீடு செய்யக்கூடாது. இந்தத் தொகையை நான்காகப் பிரித்து முதலீடு செய்யவேண்டும். விலை குறைந்து இருக்கும்போது முதலில் 2,500 ரூபாய்க்கு பங்குகளை வாங்கவேண்டும். அதற்கு அடுத்து விலை குறையும்போது அதே நிறுவனப் பங்கில் இரண்டாவது முறையாக 2,500 ரூபாயை முதலீடு செய்யவேண்டும். இந்த முறையிலேயே மீதமுள்ள பணத்தையும் 2,500 ரூபாய் ஆகப் பிரித்து அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்துவர வேண்டும். இது ஒரு நிறுவனப் பங்குக்கான முதலீட்டு முறை. இது போலவே மொத்தம் இருபது பங்குகளில் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த முறையில் பங்குக் கலவை ஒன்றை உருவாக்க ஆறு மாதம் முதல் பன்னிரண்டு மாதம் வரை பிடிக்கும்.

இவ்வாறு உருவாக்கிய பங்குக் கலவையை மூன்று ஆண்டுகள் வரை வைத்திருக்க வேண்டும். இது கிடைக்கும் லாபத்தை அதிகப்படுத்துவதற்கான காலம். இதற்கிடையில் சந்தையின் புள்ளிகள் சரியலாம், உயரலாம். பங்குக் கலவை மூலம் ஆண்-டுக்கு சராசரியாக 25 முதல் 30% வருமானத்தை எதிர்பார்க்கலாம்'' என்ற பிரபாகர் பங்குகளை விற்பதற்கான தருணம் பற்றியும் சொன்னார்.

''முதலீட்டுக் காலம் மூன்று ஆண்டுகள் என்றாலும் விற்பதற்காக அவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த வருமானம் இடைப்பட்ட காலத்தில் கூட கிடைக்கலாம். அப்போது எந்தப் பங்கு லாபம் கொடுக்குமோ அதில் ஐம்பது சதவிகிதப் பங்குகளை விற்று லாபம் எடுத்து வெளியேறலாம். மீதமுள்ள பங்கை பங்குக் கலவையில் தொடர்ந்து வைத்திருக்கலாம். லாபத் தொகையைக் குறைந்த விலைக்கு வரும் வேறு நல்ல வளர்ச்சியுள்ள பங்குகளில் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டு முறையானது விற்க, வாங்க என தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும். நம் இலக்கு மூன்று வருடங்கள். அந்தச் சமயத்தில் எவ்வாறு முதலீடு செய்தோமோ அதே முறையில் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுக்கவேண்டும்.

செய்த முதலீடுகளை வருடத்துக்கு ஒருமுறை மறுஆய்வு செய்து பார்க்கவேண்டும். வளர்ச்சி உள்ள துறைகளாக இருந்தவை இப்போது தலைகீழாக மாறியிருக்கலாம். அந்தத் துறைக்குச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ விஷயங்கள் நடந்திருக்கலாம். அந்த நிறுவனப் பங்குகளை வேறு நிறுவனம் அல்லது வேறு துறைகளுக்கு மாற்றிக்கொள்ளலாம். அவ்வாறு மாற்றும்போது நஷ்டம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல முதலீட்டு ஆலோசகர்கள் உதவியுடன் இதைச் செய்வது நல்லது. அதேபோல் வெளியில் எடுக்கும் பணத்தையும் திட்டமிடாமல் ஏதாவது ஒரு பங்கில் முதலீடு செய்யக்கூடாது'' என்றவர், முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பட்டியலிட்டார்.

ஒரு துறையில் இரண்டு பங்குகளுக்கு மேல் முதலீடு செய்யக்கூடாது.

நிறுவனம் தொடர்ந்து டிவிடெண்ட் கொடுத்து வந்துள்ளதா, குறிப்பாக ஒரு பங்கின் சந்தை விலைக்கு எத்தனை சதவிகிதம் டிவிடெண்ட் கொடுத்துள்ளது என்று கவனிக்கவேண்டும்.

சந்தையில் அதிகமாக வர்த்தகமாகும் பங்குகளாகத் தேர்வு செய்யுங்கள்.

உங்களுக்குத் தெரியாத அதே சமயம் சிறிய நிறுவனங்களில் ரிஸ்க் எடுக்காதீர்கள்.

உற்பத்தியைத் தொடங்காத நிறுவனங்களை இந்தக் கலவையில் சேர்க்காதீர்கள்.

இதர வருமானத்தால் அதிக லாபம் பெறும் நிறுவனப் பங்குகளைத் தவிர்த்து விடுங்கள்.

விற்பனை (நெட் சேல்ஸ்) அதிகம் உள்ள நிறுவனங்களாகத் தேர்வு செய்யுங்கள்.''

நன்றி, விகடன்.

30 June 2008

சுப்பிரமணியபுரம்- ஒரு ஃபிளாஷ்பேக்

|0 comments
காதுகளை மறைக்கும் ஹிப்பி கிராப், தரையைப் பெருக்கும் பெல்பாட்டம், இரண்டு வார தாடி மண்டிய முகம், கண்களில் எப்போதும் ஒரு மிதப்பு... இதைப் படிக்கும் பலருக்கும், ஒருதலை ராகம் படமும், எண்பதுகளில் தாங்கள் அனுபவித்த இளமைக் காலங்களும் நினைவுக்கு வந்து சிலிர்க்கச் செய்துவிட்டுப் போகும்.

அந்த சிலிர்ப்பை மீண்டும் ஒரு முறை அன்றைய இளைஞர்களுக்குத் தரும் நோக்கோடு எடுக்கப்பட்டுள்ள படம் சுப்பிரமணியபுரம். இநதப் படம் ஆரம்பிக்கப்பட்ட தினத்திலிருந்தே, படத்தைப் பற்றி வரும் செய்திகள் அனைத்தும் ஆரோக்கியமாகவே இருப்பதால், படம் குறித்த எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படத்தின் இயக்குநர் சசிகுமார் எண்பதுகளில் தன் இளமையை அனுபவித்தவர். பாலாவின் உதவியாளர் என்பது கூடுதல் தகுதி.

அந்த நாட்களின் இனிமையை அப்படியே திரும்பத் திரையில் காட்ட வேண்டும், இன்றைய இளைஞர்களுக்கும் உணர்த்த வேண்டும். வெறுமனே அந்த காலத்தைப் படம் பிடித்தால் மட்டும் போதாது. எண்பதுகளில் காதலுக்கு இருந்த வலிமை என்ன, நட்புக்கு இருந்த மரியாதை என்ன என்பதையும் புரிய வைப்பதே என் லட்சியம், என்கிறார் சசிகுமார்.

சென்னை-28 புகழ் ஜெய், புதுமுகம் மாரி, கஞ்சா கருப்பு நடித்துள்ள இப்படத்தின் கதாநாயகி புதுமுகம் ஸ்வாதி. இயக்குநர் சமுத்திரக்கனி முதல் முறையாக வில்லன் வேடம் போட்டிருக்கிறார் இப்படத்தில்.

ஜூலை 4-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது சுப்பிரமணியாபுரம்.

ஒரு இனிய பிளாஷ்பேக்குக்கு தயாராகுங்க...

மன நோய்க்கு ஆன்-லைன் சிகிச்சை

|0 comments
இணையதளங்களால் ஏற்பட்டுள்ள பல பயன்களில் ஒன்று மன நோய்க்கான ஆன்-லைன் சிகிச்சை. மன நோயால் அவதிப்படும் பலர், ஆன்-லைன் மூலம் சிகிச்சை மூலம் குணமடைந்துள்ளது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மன அழுத்தம், மன உளைச்சல் போன்ற நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆன்-லைன் மனோ சிகிச்சை அல்லது ஈ-தெரபி வழங்கப்படுகிறது. இது மருத்துவமனைகளில் கிடைக்கும் சிகிசைகளை விட சிறப்பாக உள்ளதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வுகளில் கண்டுபிடித்த விவரங்களை ஜர்னல் ஆஃப் மெடிகல் இன்டர்நெட் ரிசர்ச் என்ற பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. தற்போது உலகெங்கும் வளரும் பொருளாதாரங்களால் ஏற்படும் வாழ்நிலை நெருக்கடிகளில் பலர் மனநோய்க்கு உள்ளாகின்றனர். ஆனால் இதற்கான சிகிச்சையை அளிக்க மருத்துவர்களுக்கு போதிய நேரம் இல்லை என்றும், குடும்ப மருத்துவர்களுக்கு நோயை தீர்ப்பதற்க்கான ஆதாரங்களும் குறைந்து வருவதாகவும் இந்த ஆய்வில் பணியற்றிய கெர்ரி ஷான்ட்லி என்பவர் கூறியுள்ளார். உதாரணமாக மனஅழுத்தம், மன உளைச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் "பேனிக் ஆன்-லைன்" என்று அழைக்கப்படும் இ-தெரபி மூலம் வெகுவாக குணமடைந்து வருவதாக அந்த பத்திரிக்கை அறிக்கை ஆய்வை மேற்கோள்காட்டி குறிப்பிட்டுள்ளது. இந்த சிகிச்சை எடுத்துக் கொண்டவர்களில் 30% பேர் இத்தகைய மன நோயிலிருந்து முழுவதும் விடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
முதற்கட்ட மனநோயான மன அழுத்தம், மன உளைச்சல், மனப் பதட்டம், டென்ஷன் உள்ள ஒரு 96 பேரை ஆன்-லைன் பேனிக் தெரபிக்கு உட்படுத்தியது. இவர்கள் 12 வாரங்களில் குணமடைந்தனர்.

இந்த ஆன்-லைன் சிகிச்சையில் பங்கேற்றவர்களுக்கு மனோவியல் நிபுணர் தொலைபேசி மூலம் பேசி பிரச்சனைகளை அறிந்து கொள்கிறார். பிறகு தொடர்ச்சியான பல ஆன்-லைன் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும். இதை வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு பிறகு 6 மாத காலம் தொடர் மருத்துவ கண்காணிப்பும் நடத்தப்படுகிறது.

அதாவது மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுபவர்களின் மனநிலையில் ஏற்படும் முன்னேற்றத்திற்கும், ஆன்-லைன் சிகிச்சை எடுத்துக் கொள்பவர்களுக்கும் பெரிய வேறுபாடு தெரியவில்லை என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியால், உட்கார்ந்த இடத்திலேயே சொற்ப செலவில் நோய்களுக்கு சிகிச்சை பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதையே இந்த ஆன்-லைன் சிகிச்சை நிரூபித்துள்ளது.

28 June 2008

அந்த "வயிறு" யார் தெரியுமா?

|0 comments
ஒரு போட்டி நடந்தது. என்ன போட்டி தெரியுமா? ஒரே மூச்சில் நூறு இட்லிகளைச் சாப்பிட வேண்டும். பல பேர் பாதியிலேயே விலகிக் கொண்டார்கள். ஒருவன் மட்டும் விடாமல் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். இவன் சாப்பிடச் சாப்பிட... இன்னொருவன் ஒரு கரும்பலகையில் சாக்பீஸால் ஒரு இட்லிக்கு ஒரு கோடு வீதமாகப் போட்டுக் கொண்டே இருக்கிறான். ஒரு கட்டத்தில் கரும்பலகையில் இடமில்லை. அதைப் பற்றி, சாப்பிடுகிறவனுக்குக் கவலை இல்லை. கோடு போடுகிறவனுக்குத்தான் கவலை! சாப்பிடுகிறவன், எதைப் பற்றியும் கவலைப்படாமல் சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். கோடு போடுகிறவன் கரும்பலகையைக் கவலையோடு பார்த்தான். 99 கோடுகள் போட்டாயிற்று. இன்னொரு கோட்டுக்கு இடமில்லை. யாருக்கும் தெரியாமல் ஏற்கெனவே போட்ட சில கோடுகளை அழித்துவிட்டு... மறுபடியும் தொடர்ந்து போட ஆரம்பித்தான். ‘நூறு இட்லிகள், சாப்பிடும் போட்டி என்பது நூறையும் தாண்டிப் போய்க்கொண்டிருந்தது. சாப்பிடுகிறவனைப் பரிதாபமாகப் பார்த்தான் கோடு போடுகிறவன். சாப்பிடுகிறவன் நிறுத்துவதாகத் தெரியவில்லை. அவனுக்குக் கோடுகளைப் பற்றிக் கவலை இல்லை. ஆகவே, அவன் அண்ணாந்து பார்க்கவே இல்லை. இது கோடு போடுகிறவனுக்கு வசதியாகப் போயிற்று சாமர்த்தியமாக ஒரு கோட்டை அழிப்பது... மறுபடி அதன் மீதே இன்னொரு கோடு போடுவது... இப்படியே சமாளித்துக் கொண்டிருந்தான். அந்த சாப்பாட்டு ராமன், இது தெரியாமல் மதியம் வரை சாப்பிட்டுக் கொண்டே இருக்கிறான். கடைசியாக ஒரு கட்டத்தில் அவன் ஏதோ யோசிக்க ஆரம்பித்தான். கோடு போடுகிறவன் கேட்டான்: என்ன யோசிக்கிறே..? நீ செய்யறது எனக்கு என்னமோ சந்தேகமா இருக்கு! நான் ஒழுங்காத்தானே கோடு போட்டுக்கிட்டு வர்றேன்! சாப்பிடுகிறவன் சொன்னான்: அதெல்லாம் ஒண்ணும் வேணாம்... எல்லாக் கோட்டையும் அழிச்சுடு... மறுபடியும் முதல்லேயிருந்து வரலாம்!

நண்பர்களே... அதிர்ச்சியடையாதீர்கள்.


எல்லையில்லாமல் இட்லிகளை உள்வாங்கிக் கொண்டிருக்கிற அந்த வயிறு யார் தெரியுமா? அதன் பெயர்: பேராசை!


சா அதி சொல்கிறார்: பேராசைக்காரனுக்கு உலகமெல்லாம் தந்தாலும்கூட பசி தீராது. மனத் திருப்தியுள்ளவனுக்கு ஒரு துண்டு ரொட்டியே போதுமானது!

26 June 2008

அசெம்பிள்டு கணினி சந்தை ஆதிக்கம்

|0 comments
பொதுவாக கணினி வாங்க வேண்டுமென்றால் பிரபல பிராண்டுகளான டெல், லெனோவா போன்ற கம்பெனிகளை நாடுவதே வழக்கமாக இருந்த நிலையெல்லாம் தற்போது மாறிவிட்டது.

கைக்கு அடக்கமான மடிக்கணினிகள், ஏன் செல்பேசியே ஒரு சிறு கணினியாக மாறி வரும் இந்தக் காலக் கட்டத்தில், உதிரிபாகங்களை தனியாக வாங்கி அவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் அசெம்பிள்டு கணினிகளுக்கு இன்றும் சந்தையில் கிராக்கி இருக்கிறது என்று கூறினால் நம்பவா முடிகிறது. ஆம். நம்பித்தான் ஆகவேண்டும்!

2007-ம் ஆண்டில் பிராண்டட் கணினிகளின் விற்பனைகளே 15 முதல் 20 சதவீதம் வரை சரிவு கண்டிருக்கும்போது, இதே ஆண்டில் அசெம்பிள்டு கணினிகள் மற்றும் மடிக்கணினிகள் விற்பனை அதிகரித்துள்ளது என்று பிரபல ஆய்வு நிறுவனம் ஐ.டி.சி. தெரிவித்துள்ளது.

2007-ம் ஆண்டில் விற்றுள்ள 65 லட்சம் கணினிகளில் "ஒயிட்பாக்ஸ்" என்று அழைக்கப்படும் அசெம்பிள்டு கணினிகள் விற்பனை மட்டும் 25 லட்சம் என்று அது தெரிவித்துள்ளது.

பிராண்டட் கணினிகள் 60 சதவீதம் விற்கிறது என்றால், அசெம்பிள்டு கணினிகள் 40 சதவீதம் விற்கிறது. ஆனால் பிராண்டட் கணினிகள் 49 சதவீதமே விற்பதாக வேறு ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

குறிப்பாக தனி நபர்கள் அதிகமாக இந்த ஒயிட்பாக்ஸ்களையே நாடுகின்றனராம். ஆனால் வர்த்தக பயன்பாடுகளுக்காக வாங்குபவர்கள் பிராண்ட் கணினிகளையே வாங்கி வருவதாக ஐடிசி கூறுகிறது.

அசெம்பிள்டு கணினிகள் சந்தையை தற்போது ஐடிசி தனது ஆய்வில் நிரந்தரமாக சேர்த்துள்ளது.

2008-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 3 மாத காலத்தில் மணிக்கு 4000 பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விற்பனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. இதே காலத்தில் விற்பனைக்கு அனுப்பப்பட்ட மொத்த கணினிகளின் எண்ணிக்கை 21 லட்சம் என்று கூறுகிறது ஐடிசி.

அதேபோல் 2007-08ம் நிதியாண்டில் வர்த்தக பயன்பாடுகளுக்காக விற்கப்பட்ட கணினிகளில் நான்கில் ஒன்று மடிக் கணினிகள் என்று தெரிவித்துள்ளது ஐ.டி.சி.

24 June 2008

அபாரமான விஷுவல் டிக்‌ஷனரி இணையதளம்

|3 comments
நாம் பல ஆங்கில அகராதியைப் பார்த்திருக்கிறோம். வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்றுதான் கூறுமே தவிர, அது எப்படி இருக்கும் என்று நமக்கு தெரிய வராது. ஆனால் மெரியம் வெப்ஸ்டர் அகராதி, சமீபத்தில் அபாரமான விஷுவல் மொழி அகராதியை இணையதளத்தில் துவங்கியுள்ளது.

அதாவது பேன்யன் ட்ரீ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தேடினால் அதற்கான பொருளோ அல்லது விளக்கமோ இருக்குமே தவிர அது எப்படியிருக்கும் என்று தெரியாது. ஆனால் புதிய விஷுவல் இணையதளத்தில் ஆலமரம் படம் வரும். அது மட்டுமல்லாது மரத்தின் பாகங்களை விளக்கும் படமும் கிடைக்கும்.

ஆரம்பக் கல்வி படித்து வரும் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க மட்டுமல்ல, பெற்றோர்கள், ஆசிரியர்கள் கற்றுக் கொள்ளவே இந்த ஆன்லைன் டிக்‌ஷனரி பெரும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதுபோன்று வாழ்வில் நாம் காணும் ஒரு 6000 பொருட்களுக்கான படங்கள் இந்த ஆன் லைன் அகராதியில் உள்ளன.

20,000 வார்த்தைகளுக்கு அது பயன்படுத்தப்படும் கான்டெக்ஸ்சுவல் அர்த்தங்களை, அருஞ்சொல் நிபுணர்களைக் கொண்டு த்யாரித்துள்ளது.

இணையதளத்தின் சைடு பாரில் வானியல், புவி, தாவரங்கள் மற்றும் தோட்டக்கலை, விலங்குகள், மனிதன், உணவு மற்றும் சமையலறை, வீடு, உடை மற்றும் பொருட்கள், கலை மற்றும் கட்டிடக்கலை, கம்யூனிகேஷன்ஸ், போக்குவரத்து மற்றும் எந்திரம், எனர்ஜி, விஞ்ஞானம், சமூகம், விளையாட்டு என்று 15 துறைகளாக பிரித்து அந்தந்த துறையைச் சேர்ந்த வார்த்தைகளுக்கான படங்களுடன் கூடிய விளக்கத்தை அளிக்கிறது இந்த ஆன் லைன் அகராதி.

பான்கிரியாஸ் என்றால் கணையம் என்று நமக்கு தெரியும், லிவர் தெரியும், பெருங்குடல், சிறுகுடல் போன்ற வார்த்தைகளெல்லாம் நமக்கு தெரியும் ஆனால் அது எப்படி இருக்கும்? விளக்கத்துடன் தெரிந்து கொள்ளவேண்டுமா உடனே செல்லுங்கள் http://visual.merriam-webster.com/ இணையதளத்திற்கு.

1996-ம் ஆண்டு தி விஷுவல் டிக்‌ஷனரி என்ற புதிய அகராதி சி.டி. ரோம்களில் வந்தது. இது ஆங்கிலம், பிரெஞ்சு, ஸ்பானிய மொழிகளில் வெளியானது. அப்போது முதல் பல்வேறு விதத்தில் மேம்பட்ட சி.டி. ரோம் டிக்‌ஷனரிகள் வந்த வண்ணம் உள்ளன.

ஆனால் ஆன்லைனில் அனைவரும் எளிதில் காணும் வண்ணம் இதனை கடுமையான உழைப்பில் உருவாக்கியுள்ளது மெரியம் வெப்ஸ்டர் நிறுவனம்.

22 June 2008

தேடும் கலை...

|0 comments
நம் எல்லொர் வழ்க்கையிலும் கண்டிப்பாக ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒண்றை தேடியே தீருவோம். வீட்டிலும் சரி அலுவலகத்திலும் சரி வாழ்க்கையிலும் சரி ஏதோ தேடிக்கொண்டேதான் இருக்கிறோம். இணையத்திலும் அதை நாம் விட்டுவைக்கவில்லை. இப்போது இணையத்தில் தேட மிகவும் பயன் படுத்தப்படும் தேடுதளம் google. இந்த தளத்தில் எப்படி தேடுவது என்று பலருக்கு தெரிவதில்லை அதனால் அவர்கள் வேண்டிய விடை கிடைக்காமல் வேறு எங்கேங்கோ சென்று கடைசியில் அவர்கள் தேட வந்ததையே மறந்து விடும் நிலமைக்கு தள்ளப்படுகின்றர். சரி... விஷயத்திற்கு வா என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.

இதோ வந்துட்டேன்... google.com "தேடுவது எப்படி" என்று டைப் செய்து கிடைத்த சுட்டிகளின் இரண்டு உங்களுக்காக.

சுட்டி-1 சுட்டி-2

இவை தவிற பிற சுட்டிகளும் பிற நுனுக்கங்களும் உங்களுக்கு தெரிந்ததை கூறலாம். அதுவும் இந்த பதிவில் பதியப்படும்.

20 June 2008

உங்கள் திருமணத்தை பதிவு செய்திருக்கிறீர்களா?

|0 comments
‘‘அடக் கொடுமையே, அந்தப் பையனும் பொண்ணும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்களாமே!’’

ஏதோ, வீட்டுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக கல்யாணம் பண்ணிக் கொள்ளும் ஜோடிகளுக்கான விஷயம் என்கிற இந்த தொனியில்தான் இன்னமும் நம் ஊரில் பதிவுத் திருமணங்கள் பற்றிய அபிப்ராயம் இருக்கிறது.

ஆன்றோரும் சான்றோரும் ஆசீர்வதிக்க, சுற்றமும் நட்பும் சூழ்ந்து நடக்கும் திருமணங்களும்கூட பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ‘திருமணங்களை பதிவு செய்வதுதான் பெண்களுக்கு பாதுகாப்பை தரும்!’ என்பது பல்வேறு குடும்ப வழக்குகளில் உணர்த்தப்பட்ட போதும், இங்கே அந்த பிரசாரம் பெரிதாக எடுபடவில்லை. விளைவு, முறையான திருமண ஆதாரம் இல்லாததால், பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், இதற்கொரு தீர்வாக, ‘திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்துகொள்ள வேண்டும்’ என்று சமீபத்தில் ஆணை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது உச்ச நீதிமன்றம்.

சீமா என்ற பெண்மணி தொடர்ந்த வழக்கில், ‘‘திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்யும் உத்தரவை மூன்று மாதங்களுக்குள் செயல்படுத்துவதற்கு விதிமுறைகளில் தேவையான திருத்தம் செய்ய வேண்டும்’’ என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது, உச்ச நீதிமன்றம்!

திருமணங்களை பதிவு செய்துகொள்ள வேண்டியது எந்த வகையில் அவசியம் என்பது பற்றி ஒரு அலசல்...

‘‘எந்த ஒரு உறவுமே சுமூகமாக இருக்கும்வரை எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அதில் சிக்கல் முளைக்கும்போது உரிய ஆதாரங்கள் இருந்தால்தானே நிவாரணம் கிடைக்கும்!’’ என்று ஆரம்பித்தார் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுமதி.

‘‘என்னதான் ஊரார் முன்பு, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து கல்யாணம் செய்துகொண்டாலும், கணவன் ஏமாற்றிவிட்டுப் போகிறான் என்கிறபோது, சட்டத்தின் முன்பு அவனை நிறுத்த இந்த சாட்சிகள் போதாது. அவர்களின் திருமணம் முறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டியது அவசியம். நம் நாட்டை பொறுத்தவரை, ‘கல்யாணம் முடிந்ததும் அதைப் பதிவு செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை’ என்பதாலேயே பெண்கள் அதிகளவில் ஏமாற்றப்படுகிறார்கள்!

கணவரால் ஏமாற்றப்படும் பெண்கள் கோர்ட் படியேறும் சமயங்களில், ‘இவர்தான் என் கணவர். இதோ, பாருங்க, இவர் எனக்கு கட்டின தாலி’ என்று எடுத்துக் காட்டுவார்கள். ஆனால், அவர்தான் மனைவி என்பதை நிரூபிக்க அந்த தாலி போதாது. ‘இவ என் மனைவியே இல்லை’ என்று அடித்துச் சொல்லிவிட்டு, அவன் தப்பித்து விடுவான். திருமண அழைப்பிதழ், திருமணப் புகைப்படம் அல்லது அவர்களின் குழந்தையின் பர்த் சர்டிபிகேட்... இவற்றில் ஏதாவது ஒன்றை ஆதாரமாகக் காட்டினால்தான் அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கும்.

நம்ம ஊரில் கோயில்களில் திருமணம் வைத்துக் கொள்வது வழக்கம். பெரும்பாலான கோயில்களில் நன்கொடை சீட்டு ஒன்றைத்தான் ரசீது போல தருவார்கள். ஒருபோதும் அது திருமணத்துக்கான ஆதாரமாக ஆகாது. முறைப்படி பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். அதேபோல், கோயிலில் அம்மன் சிலைக்கு முன்னே நின்றபடி குங்குமம் வைப்பது, சும்மா ஒரு மஞ்சக் கயிறை கட்டி விடுவது... இவை எதுவுமே சட்டத்தின் முன்பு எடுபடாது.

நாளை உங்கள் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதென்றாலும், கல்யாண மண்டபத்துக்கு வாடகை கொடுக்கும்போது, மணப்பெண் மற்றும் மணமகன் பெயரில், கல்யாணத் தேதியைக் குறிப்பிட்டு தெளிவான ரசீதாக மண்டப உரிமையாளரிடமிருந்து வாங்கி கொள்ளுங்கள். கல்யாண பத்திரிக்கை முதல் அனைத்தை யும் பத்திரமாக வைத்திருங்கள்!’’ என்று சொன்ன சுமதி,

‘‘நம் வாழ்க்கை நன்றாகவே இருக்கும் என்றாலும், பாதுகாப்போடு இருப்பதில் தவறில்லை. பின்னாளில் கோர்ட் படியேறுவோம் என்று எதிர்பார்த்து யாரும் திருமணம் செய்துகொள்வதில்லையே’’ என்று முடித்தார்.


சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஷீலா ஜெயப்பிரகாஷிடம் பேசியபோது, ‘‘கடந்த 15 ஆண்டு களாகவே திருமணங்களை கட்டாயமாகப் பதிவு செய்யவேண்டும் என்ற பிரசாரம் உள்ளது. ஆனால், ‘கல்வியறிவில் நம் மக்கள் பின்தங்கியுள்ளனர்’ என்ற காரணத்தைக் காட்டி, இதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது நம் அரசு. கல்வியறிவில் பின்தங்கிய அதே மக்கள்தானே கையளவு நிலமோ, வீடோ வாங்கினால்கூட, அருகில் இருக்கும் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று, சொத்தை கிரயம் செய்கின்றனர்? எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும் கைநாட்டு போட்டாவது சொத்தை பதியமுடியும் என்கிறபோது, திருமணங் களைப் பதிவதும் சுலபம்தானே!’’ என்று சூடாகவே ஆரம்பித்தார்.

‘‘பதிவுத் திருமணங்களின் அவசியம் குறித்த அரசின் பிரசாரமும் விளம்பரங்களும் இன்னும் முடுக்கிவிடப் பட வேண்டும். போலியோ சொட்டு மருந்து பிரசாரம் எப்படி நாட்டின் மூலை முடுக்கு எல்லாம் பரவி, இன்று வெற்றியடைந்துள்ளதோ, அதே வழிமுறையில் இதையும் பரப்பவேண்டும். இப்போதிலிருந்தே தொடங்கினால், இன்னும் ஐந்து ஆண்டுகளில் பலன் கிடைக்கும். அதன் பிறகு, ‘பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லாது’ என்ற நிலைமை வந்தால், திருமணப் பதிவும் கட்டாயமாகிவிடும்’’ என்றவர், திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள முக்கியமான நன்மைகளை பட்டியலிட்டார்...

‘‘திருமணத்துக்கு என்று வயது வரம்பு இருப்பதால், மிகச் சிறிய வயதிலேயே திருமணம் செய்து கொடுப்பதும், குழந்தைத் திருமணங்களும் அறவே நின்றுவிடும் என்பது முதல் நன்மை.

முதல் மனைவி இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்ய முடியாது என்பது அடுத்த நன்மை. இதனால், பெண்களின் மணவாழ்க்கை, அவர்கள் அறியாமலேயே பறிபோவதிலிருந்து காப்பாற்றப்படும். அதேபோல், மணவாழ்வில் பிரச்னை என்று வரும்போது, ‘எனக்கும் இவளுக் கும் திருமணமே நடக்கவில்லை’ என்று கணவன் பொய் சொல்லித் தப்பிக்க முடியாது.

மூன்றாவது, கணவன் இறந்தபிறகு, அவரது சொத்து மற்றும் உடைமைகள், பதிவு செய்யப் பட்ட மனைவிக்குத்தான் சட்டப்படி சேரும். எனவே, கட்டாயமாக திருமணத்தைப் பதிவு செய்திருந்தால், கணவருக்கு சட்டத்துக்குப் புறம்பான துணை இருந்தாலும், அவர்களிடம் சொத்தை இழக்காமல் காப்பாற்றிக் கொள்ள முடியும்! எனவே, ஒவ்வொரு திருமணமும் பதிவு செய்யப்படுவது மிக மிக அவசியம்’’ என்றார் ஷீலா.

திருமணத்தைப் பதிவு செய்வதற்கு அடிப்படையில் என்ன தேவை, எப்படிப் பதிவு செய்வது, எங்கு செய்வது போன்ற கேள்விகளுடன் சென்னை பதிவுத்துறை தலைமை அலுவலகம் சென்றோம். அங்குள்ள பதிவு அதிகாரி கூறியதில் இருந்து...

‘‘திருமணப் பதிவில், இந்து திருமண சட்டம், சிறப்பு திருமண சட்டம் (ஷிஜீமீநீவீணீறீ னீணீக்ஷீக்ஷீவீணீரீமீ கிநீt) என இரண்டு வகை உண்டு.

இந்து திருமண சட்டம் என்பது, இந்து மதம் மட்டுமல்லாது புத்த மதம், சீக்கிய மதம், ஜைன மதம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. இந்தச் சட்டத்தில், திருமணம் வேறொரு இடத்தில் நடந்திருக்கும். அதன் பதிவு மட்டுமே அலுவலகத்தில் செய்யப்படும்.

இதற்கான தகுதிகள் என்னவென்றால், பெண்ணுக்கு 18 வயதும் ஆணுக்கு 21 வயதும் முடிந்திருக்க வேண்டும். இருவருக்குமான உறவுமுறை திருமணத் துக்கு புறம்பானதாக இருக்கக்கூடாது. இருவரில் எவருக்குமே முன்பே ஒரு திருமணம் முடிந்து, துணை இருக்கக் கூடாது.

இந்தத் தகுதிகள் இருக்கும்பட்சத்தில், மணமகன் அல்லது மணமகள் வசிக்கும் பகுதியின் எல்லைக்கு உட்பட்ட அல்லது திருமணம் நடந்த இடத்தின் எல்லைக்கு உட்பட்ட சார்&பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் வந்து திருமணத்தைப் பதிவு செய்யலாம். இதற்கான பதிவுக் கட்டணம் ஐந்து ரூபாய் மட்டுமே.

அவர்களது திருமணம், எங்காவது (கோயிலிலோ, வீட்டிலோ, மண்டபத்திலோ) எந்த முறையிலாவது (மரபு முறையிலோ, சீர்திருத்த முறையிலோ) நடந்ததற்கான ஆதாரம், பதிவுக்கு அவசியம் தேவை. அது திருமணப் பத்திரிகை, புகைப்படம் அல்லது கோயிலில் தந்த ரசீது போன்ற ஏதாவது ஒன்றாக இருக்கலாம். பதிவுக்கான விண்ணப் பத்தில் மூன்று பேர் சாட்சிக் கையெழுத்திட வேண்டும். அதே மூவர், பதிவு அலுவலகத்துக்கும் நேரில் வந்து கையெழுத்திட வேண்டும். ‘இந்தத் திருமணத்தில் வரதட்சணை வாங்கவும் இல்லை, கொடுக்கவும் இல்லை’ என்று இரு தரப்பிலிருந்தும் உறுதிமொழி தரவேண்டும். மணமக்களின் முகவரிக்கான ஆதாரமும் வயதுக்கான ஆதாரமும் அவசியம் தேவை.

பல ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி, பதிவு செய்யாமல் விட்டவர்களும் இதே முறையில் பதிவு செய்து கொள்ளலாம்.

அடுத்ததாக, சிறப்பு திருமண சட்டம்... எப்படிப்பட்ட ஜோடியும் (அதாவது இரு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் அல்லது ஒரே மதத்தை சேர்ந்தவர்கள்) இந்தச் சட்டத்தின் கீழ் திருமணத்தைப் பதிவு செய்யலாம். அவர்களுக்கு பதிவாளர் அலுவலகத்திலேயே திருமணம் நடத்தி வைக்கப்படும். பிறகு, பதிவும் செய்யப்படும்.

இந்து திருமண சட்டத்துக்கு சொன்ன அனைத்துத் தகுதிகளும் இதற்கும் இருக்கவேண்டும். கூடுதலாக, இன்னொரு விஷயமும் உண்டு. அதாவது, ‘இந்த இருவருக்கும் திருமணம் நடக்கப் போகிறது. ஆட்சேபணை உள்ளவர்கள் 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்’ என்ற அறிவிப்பு, மணமகன், மணமகள் இருவரின் எல்லைக்குட்பட்ட சார்&பதிவாளர் அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். 30 நாட்களுக்குள் யாரிடமிருந்தாவது ஆட்சேபணை வரும்பட்சத்தில், திருமணம் நடத்தப்பட மாட்டாது. அப்படி எந்த ஆட்சேபணையும் வரவில்லை என்றால், 31&ம் நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் அவர்கள் திருமணம் முடித்து, பதிவும் செய்து கொள்ளலாம். இந்த ஆதாரங்கள், சாட்சிகள், விதிமுறைகளின்படி பதிவு செய்வதற்கான கட்டணம் பத்து ரூபாய்!’’ என்று விரிவாக சொல்லி முடித்தார் அந்த அதிகாரி.

பதிவு தொடர்பான தகவல்கள் www.tnreginet.net என்ற இணையதள முகவரியிலும் கிடைக்கிறது. பதிவு பற்றிய சந்தேகங்களை igregn@tnreginet.net என்ற மினஞ்சல் முகவரிக்கு அனுப்பினால், 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அனுப்பி வைக்கிறார்கள்.

கண்முன்னே கைமாறும் நிலத்தை வாங்குவதைகூட பதிவு செய்து வைக்கும் நாம், தலைமுறைகள் தாண்டி தொடரும் இந்த புனிதமான பந்தத்தை பதிவு செய்து வைக்க தயங்கலாமா?

18 June 2008

எந்த காதால் ஹலோ???

|0 comments
கடந்த மாதம் நண்பர் பிகேபி அவர்கள் இடது காதால் ஹலோ... என்கிற பதிவில் இடது காதால் மட்டுமே ஹலோ சொல்லுங்கள் என்று அவருக்கு வந்த மின் அஞ்சல் படத்தையும் வெளியிட்டு அதனால் எற்ப்படும் பாதிப்பையும் பற்றி எழுதியிருந்தார். அதை மறுத்து நண்பர் கார்திக்கேயன் அவர்கள் அப்படி எல்லாம் இல்லை எந்த காதால் ஹலோ சொன்னாலும் 10மணி நேரத்திற்க்கு மேல் பேசுபவர்களுக்கு தான் தான் அந்த பாதிப்பு வரும் என்றும் இந்தியாவி அதை பற்றிய அறிவு கம்மி என்றும் கூறியிருந்தார். இப்பேது தான் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் இதற்க்குறிய நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வருகிறது. அதற்குறிய சுட்டிகள் சுட்டி1 சுட்டி2.

அதேபோல் இப்போதெல்லம் சிட்டுக்குருவிகளை பார்க்க முடிவதில்லை. (வேண்டுமென்றால் குருவி படம் பார்க்கலாம்). தேனீக்களும் குறைந்து வருவதாக தகவல். இவை அனைத்தும் செல்போன் கோபுரங்களின் மூலம் வரும் கதிர் வீச்சுகளினால் தான். தேன் கூட்டை கழைக்க முன்பெல்லாம் தீப்பந்தம் எடுத்துக்கொண்டு செல்வார்கள் இப்போது ஒரு செல்போனை எடுத்துக்கொண்டு சென்றால் அத்தனை தேனீக்களும் பறந்துவிடுமாம்...


எது எப்படி இருந்தாலும் செல்போன் பேசுபவர்களுக்கு பேசிக்கொண்டேதான் இருக்கப்போகிறர்கள். முன்பு குளிர் பானங்களில் பூச்சி கொல்லி மருந்து கலந்துள்ளதாக சொன்னார்கள் அதற்க்கா என்ன குளிர்பானங்கள் குடிப்பதையா விட்டுவிட்டர்கள்...

17 June 2008

பார்வையற்றவர்களுக்கான செல்போன்

|0 comments
செல்போன் தயாரிப்பு மற்றும் சேவை நிறுவனமான ஸ்பைஸ், பார்வையற்றவர்கள் எளிதாகபயன்படுத்தும் வகையிலான புதிய செல்போனை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இதனைத் தெரிவித்த ஸ்பைஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நவீன் கவுல், இதற்கான பணியில் நிறுவனத்தின் ஆய்வு மற்றும் மேம்பாட்டுத்துறை தீவிரமாக இறங்கியுள்ளதாக கூறினார்.

பார்வையாற்றவர்கள் பயன்படுத்தும் வகையில், பிரெய்லி (braille) நம்பர் பேட் கொண்ட இந்த வகை செல்போன் அடுத்த 3 மாதத்திற்குள் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்பைஸ் லைப்டைம் ப்ரிபெய்டு இணைப்புடன் கூடிய ரூ.599 செல்போனை நவீன் கவுல் அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மொத்தம் 75 கிராம் மட்டுமே எடைகொண்ட இந்த புதிய செல்போனில் 3 மணி நேரம் தொடர்ந்து பேசும் அளவுக்கு பேட்டரி சக்தி உள்ளது. ஸ்பீக்கர் வசதியுள்ள இந்த போனில் 9 நம்பர்களை ஸ்பீட் டயல் வசதியில் வைத்துக் கொள்ள முடியும்.