19 October 2012

தமிழக மின்சாரப் பிரச்சினைக்கான உண்மைக் காரணமும், அதற்கான தீர்வும்!

|4 comments

தமிழகத்தின் மின் பற்றாக்குறை என்பது இன்றைய தேதியில் சுமார் 4000 - 4500 மெகாவாட்டாக இருக்கிறது. 2013 ஆம் ஆண்டில் இந்தப் பற்றாக்குறை 5000 - 5500 மெகாவாட்டாகவும், 2014 இல் இது 6200 மெகாவாட்டாகவும், 2015 இல் இது 7300 மெகாவாட்டாகவும் கூடியிருக்கும் என்பது மின் நிபுணர்களின் கணிப்பு.


இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் அரசுக்கு சொந்தமான மூன்
று மின் உற்பத்தி நிலையங்கள் பழுதடைந்த நிலையில் கேட்பாரற்றுக் கிடக்கின்றன. மின் உற்பத்தியைத் தொடங்கும் நிலையில் உள்ள மூன்று புதிய மின் உற்பத்தி நிலையங்களை (என்ன காரணத்திற்கோ) இன்றைய நெருக்கடியான காலகட்டத்திலும் மின்சாரத்தை உற்பத்தி செய்ய விடாமல் தமிழ்நாடு அரசு நிறுத்தி வைத்திருக்கிறது.


தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமான குத்தாலம் (தஞ்சைமாவட்டம்), வழுதூர் 1 மற்றும் 2 (ராமநாதபுரம் மாவட்டம்) ஆகிய எரிவாயு மின் நிலையங்களில் அடிக்கடி எந்திரங்கள் பழுதடைவதும், பல மாதங்களுக்குப் பழுது நீக்கப்படாமல் இருப்பதும் வாடிக்கையாக இருக்கிறது. குத்தாலம் மின் நிலையம் 101 மெகாவாட் திறனையும், வழுதூர் 1 மற்றும் 2 மின் நிலையங்கள் 95 மற்றும் 92 மெகாவாட் திறனைக் கொண்டிருகின்றன. இந்த மூன்று மின் நிலையங்களுமே முழுமையாக செயல் பட்டால் 288 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும்.


இன்றைய தேதியில் இந்த மின் நிலையங்கள் பழுதடைந்துள்ளன. அவற்றின் பழுது நீக்கப்படாமல் அவற்றின் மின் உற்பத்தி முடங்கிக் கிடக்கிறது. அவற்றில் உள்ள பழுதை நீக்க பல மாதங்களாகத் தமிழக அரசு முயற்சி எடுக்க மறுத்து வருகிறது. இதனால் கிட்டத்தட்ட 288 மெகாவாட் மின்சாரத்தை நாம் இழந்து கொண்டிருக்கிறோம். இந்த மின்நிலையங்கள் அன்றாடம் உபயோகிக்க வேண்டிய இயற்கை எரிவாயுவிற்காக, மின் உற்பத்தி செய்யப்படாமல் இருக்கும் இந்தக் காலகட்டத்திலும் ஒவ்வொரு நாளும் 71 லட்ச ரூபாயை தமிழ்நாடு மின் வாரியம் GAIL நிறுவனத்திற்குக் கட்டிக்கொண்டிருக்கிறது.


2007 இல் வட சென்னை மற்றும் மேட்டூர் மின் நிலையங்களில் 2X600 மற்றும் 1X600 என்ற 1800 மெகாவாட் திறனுள்ள அனல் மின் உற்பத்தி அலகுகளை அமைக்க REC நிறுவனத்தின் உதவியுடன் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. வடசென்னை முதல் அலகிற்கான பணி 2008 பிப்ரவரியில் துவங்கியது. அதன் கட்டுமானப் பணி 2011 மே மாதத்தில் நிறைவு பெற வேண்டும். அதுபோலவே வடசென்னை இரண்டாவது அலகின் பணி 2008 ஆகஸ்டில் தொடங்கியது. 2011 நவம்பர் மாதம் அது முடிவடைய வேண்டும். வடசென்னை திட்டத்தைப் போலவே, மேட்டூர் மின் நிலையத்தில் திட்டமிடப்பட்ட 600 மெகாவாட்டிற்கான பணி 2008 ஜூன் மாதம் தொடங்கியது. 2011 செப்டம்பரில் அது நிறைவு பெற வேண்டும். இவை அனைத்தும் ஏற்கனவே உள்ள மின் நிலையங்களில் மேற்கொள்ளப்படும் விரிவாக்கத் திட்டங்கள்தாம் (expansion plans) என்பதால் இவற்றை அமைத்து, இயக்க குறைந்த காலமே போதுமானது.


சென்னையின் அருகே உள்ள வள்ளூரில் 3X500 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தினை மத்திய அரசு நிறுவனமான NTPC-யின் துணையுடன் நிறுவ 2002 ஆம் ஆண்டில் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துகொண்டது. இதன் உற்பத்தித் திறனான 1500 மெகாவாட்டில் 1041 மெகாவாட் மின்சாரம் தமிழகத்திற்குக் கிடைக்கும் என்பது உடன்படிக்கை. ஆனால் இந்தத் திட்டம் 2007 ஆம் ஆண்டு வரை கிடப்பில் போடப்பட்டது. கடைசியில், 2007 ஆகஸ்டு மாதம் அதன் கட்டுமானப் பணிகள் தொடங்கின. 2010 அக்டோபரில் முதல் அலகும், 2011 மார்ச்சில் இரண்டாவது அலகும், 2012 செப்டம்பரில் மூன்றாவது அலகும் உற்பத்தியைத் தொடங்க வேண்டும்.


இன்றைய தேதியில், மேட்டூரில் உள்ள 600 மெகாவாட் அலகும், வடசென்னையின் இரண்டாவது அலகான 600 மெகாவாட்டும், வள்ளூரில் உள்ள முதலாவது அலகான 500 மெகாவாட்டும் முடிவடைந்துள்ளன. 2012 மார்ச் – மே மாதங்களில் அவை முழுமையாக பரிசோதனை செய்யப்பட்டு மின்சாரக் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளன (synchronised). எனினும் என்ன காரணத்தினாலோ தமிழக அரசு அவற்றில் இருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதை நிறுத்தி வைத்திருக்கிறது. இதன் காரணமாக, நாம் 1547 மெகாவாட் மின்சாரத்தை இழந்து நிற்கிறோம்.


ஆக, தமிழக அரசு நினைத்தால் இன்றே 1835 மெகாவாட் மின்சாரத்தை (1547 + 288) உடனடியாக உற்பத்தி செய்ய முடியும். இந்த மின்சாரம் அரசுக்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரமாதலால், தனியாரிடம் இருந்து வாங்கும் கொள்ளை விலை மின்சாரத்தைப் போலல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும் மின்சாரமாகும். எனினும், தமிழக அரசு இந்த மின்சாரத்தை உற்பத்தி செய்வதைத் தட்டிக் கழித்து வருகிறது.


நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனும், தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து தூத்துக்குடியில் 2 X 500 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளை நிறுவும் பணியினை 2008 மே மாதத்தில் துவக்கின. முதலாவது அலகு ஜூன் 2013 இலும், இரண்டாவது அலகு மார்ச் 2012 இலும் உற்பத்தியைத் தொடங்கியிருக்க வேண்டும். இந்தத் திட்டத்திலிருந்து தமிழகத்திற்கு சுமார் 387 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ஆனால், இந்தப் பணியும் நிறைவேற்றப்படாமல் காலம் கடத்தப்பட்டு வருகிறது.


நெய்வேலியில் உள்ள முதலாவது மின் நிலையத்தின் விரிவாக்கமான 2 X 250 மெகாவாட் மின் உற்பத்தி அலகுகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு 225 மெகாவாட் கிடைக்க வேண்டும். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் முடிக்கப்படாமல் இருக்கும் இந்த மின் உற்பத்தி அலகுகளை துரிதமாக முடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இன்றுவரை தமிழக அரசு வைக்காமல் இருக்கிறது.


ஆந்திர மாநிலம் சிம்மத்ரி அனல் மின் நிலையத்தின் 1000 மெகாவாட் திறனுள்ள முதல் இரண்டு அலகுகளில் இருந்து தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டிய 190 மெகாவாட் மின்சாரத்தை (காட்கில் ஃபார்முலா) சட்டத்திற்குப் புறம்பாக மத்திய அரசானது ஆந்திர மாநிலத்திற்கே தாரை வார்த்திருக்கிறது. எனினும் இந்த 190 மெகாவாட் மின்சாரத்திற்கான தனது உரிமையை தமிழக அரசானது மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற இன்றளவும் முயற்சி செய்யவில்லை.


ஆக, தமிழக அரசின் எதிர்மறை நடைமுறை காரணமாக, இன்று நாம் கிட்டத்தட்ட 2025 மெகாவாட் (1835 + சிம்மத்ரி 190) மின்சாரத்தை இழந்து நிற்கிறோம். இந்தத் திட்டங்களை சரியாக கையாண்டாலேயே இன்றைய பற்றாக்குறையான 4000 மெகாவாட்டில் பாதியை சரிசெய்துவிட முடியும். என்றாலும்கூட , இதற்கான நடவடிக்கைகளை எடுக்காமல் பிரச்சினையை முற்றவிட்டு, தமிழக மக்களைக் கடும் துயரில் ஆழ்த்தி அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.


தனக்கு சொந்தமான மின் நிலையங்களில் இருந்து குறைந்த விலையில் உற்பத்தி செய்ய முடிகின்ற மின்சாரத்தை உற்பத்தி செய்யாமல், கூடுதல் விலையில் தனியாரால் விற்கப்படும் மின்சாரத்தை வாங்கினால் ஒழிய தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க இயலாது என்ற வாதத்தை அது முன்வைத்து வருகிறது. இதோடு சேர்த்து, கூடங்குளம் அணு மின் நிலையம் நிறைவேற்றப்படாமல் இருப்பதுதான் தமிழகத்தின் மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்க்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்றும் கூறி வருகிறது. தமிழக அரசின் இந்த வாதம் தவறானது.


கூடங்குளத்தில் உள்ள வி.வி.இ.ஆர் 1000 வகை அணு உலையின் அதிகபட்ச இயங்கு திறன் 80% ஆகும். அதாவது பிரச்சினைகளின்றி அது இயங்கினால் 800 மெகாவாட் மின்சாரத்தையே அதனால் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்த மின்சாரத்தில் அதன் கடல் நீர் உப்பகற்றி ஆலைகளை இயக்குவதற்கே சுமார் 100 மெகாவாட் மின்சாரம் தேவைப்படும். அணு உலையின் இயக்கத்திற்கும், அது தொடர்பான மின் இயந்திரங்களின் இயக்கத்திற்கும் (auxillary consumption) மேலும் ஒரு 100 மெகாவாட் தேவைப்படும். எனவே, அணு உலையில் இருந்து கிடைக்கப்போவது என்னவோ 600 மெகாவாட் மின்சாரம்தான். இதில் தமிழகத்திற்குக் கிடைக்கவேண்டிய பங்கு 46.25% என்பதால் இதில் இருந்து இறுதியில் கிடைக்கப்போவது 277.5 மெகாவாட்தான். மின்சாரம் கடத்தப்படும்போது ஏற்படும் கம்பி இழப்பான 22% போக, கடைசியில் வெறும் 216 மெகாவாட் மின்சாரத்தைத்தான் இந்த அணு உலையில் இருந்து தமிழகம் பெற முடியும்.


இந்த 80% உற்பத்தித் திறனை அணு உலையினால் அது இயங்கத் தொடங்கிய முதல் நாளிலேயே அடைந்துவிட முடியாது. அந்த நிலையை எட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஆகும் என்பதுதான் உலகின் பிற பகுதிகளில் இயங்கிக் கொண்டிருக்கும் அணு உலைகளின் அனுபவம். எனவே. கூடங்குளம் அணு மின் நிலையமானது முதல் இரண்டு ஆண்டுகளில், அதாவது 2015 ஆம் ஆண்டுவரை, அதன் 30-40% உற்பத்தித் திறனிலேயே இயங்க முடியும். இதன்படி, தமிழகத்தின் பங்கான 46.25% என்பதை வைத்துக் கணக்கிட்டால், ஒவ்வொரு அணு உலையில் இருந்தும் சுமார் 138 இல் இருந்து 185 மெகாவாட் மின்சாரத்தைத்தான் 2015 ஆம் ஆண்டு வரையிலுமே தமிழகத்தால் பெறமுடியும். இதில், கம்பி இழப்பான 22% ஐ கழித்து விட்டால் கிடைக்கப்போவதென்னவோ 108 இல் இருந்து 145 மெகாவாட்தான். இரண்டு அணு உலைகளும் இணைந்தே மின்சாரத்தை அளித்தாலும் கூட, தமிழகத்திற்கு வெறும் 216 இல் இருந்து 290 மெகாவாட்தான் கூடங்குளம் அணு மின் நிலையத்திலிருந்து கிடைக்கப் போகிறது.


எனவே, உற்பத்தி தொடங்கப்படாமல் தமிழக அரசால் (ஏதோ காரணத்தால்) நிறுத்தி வைக்கப்படப்பட்டுள்ள 2025 மெகாவாட் திறனுள்ள மின் நிலையங்களில் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கையைத் தமிழ்நாடு அரசு போர்க்கால ரீதியில் உடனடியாக எடுக்க வேண்டும்.


கடுமையான மின்சாரப் பற்றாக்குறைக்கான மற்றொரு காரணமாக இருப்பது, மின்சாரத்தினை சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினருக்கும் சமமாகப் பங்கிட்டுக் கொடுக்காமல் இருக்கும் (equitable distribution) மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் நடவடிக்கையாகும். “மின் பற்றாக்குறை இருக்கும் காலத்தில் மின்சாரத்தினைப் பங்கிட்டுக் கொடுக்கும் அதிகாரத்தினை” மின்சாரச் சட்டத்தின் பிரிவு 23 ஆனது மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு வழங்கியுள்ளது.


மின்வெட்டு மற்றும் மின் விடுமுறைக்கான காலம் தொடர்பான அரசின் அறிவிப்புகள் பயனீட்டாளர்களைக் கட்டுப்படுத்தாது; மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதல் இருந்தாலன்றி அந்த உத்தரவுகளை அமல் படுத்த முடியாது.


2012 மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட மின்விடுமுறை மற்றும் 40%-க்கு உயர்த்தப்பட்ட மின்வெட்டை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் 600-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. அத்தனை வழக்குகளையும் ஒழுங்குமுறை ஆணையத்தின் விசாரணைக்கே உயர்நீதி மன்றம் திருப்பி அனுப்பிவிட்டது.


அதுபோன்றே, 2008 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழக அரசு 40% மின்வெட்டை முதல்முறையாக அமல் படுத்தியபோது ஒழுங்குமுறை ஆணையம் அதற்கான அனுமதியை வழங்கவில்லை. இதன்காரணமாக ஐந்து வார காலத்திற்குத் தமிழ்நாடு மின்வாரியம் தமிழக அரசின் உத்தரவை அமல்படுத்த முடியவில்லை. இறுதியில், அரசின் உத்தரவில் பல மாற்றங்களைச் செய்து ஒழுங்குமுறை ஆணையம் மின்வெட்டிற்கான உத்தரவிற்கான அனுமதியை அளித்தது.


அரசின் தலையீடு இல்லாமலேயே மின்சாரத்தினைப் பங்கீடு செய்து கொடுப்பதற்கான அதிகாரத்தினை ஒழுங்குமுறை ஆணையம் பெற்றுள்ளது. தற்போது தமிழகத்தில் நிலவும் பாரபட்சமான மின்வழங்கு முறையில் ஒழுங்குமுறை ஆணையம் சுயமாகவே தலையிட்டுத் தன் கடமையை நிறைவேற்றியிருக்க வேண்டும். ஆனால், அது தன் கடமையை ஆற்றவில்லை.


பாரபட்சமான மின்வழங்குதல் என்பதைக் கீழ்க்கண்ட காரணங்களைக் கொண்டு புரிந்து கொள்ள முடியும்:


• சென்னை மாநகரம் மட்டுமே தமிழகத்தின் மொத்த மின்சாரத்தில் 25%-க்கும் மேலாக எடுத்துக் கொள்கிறது. தமிழகத்தின் பிற பகுதிகள் 14-16 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் தவிக்கும் பொழுது சென்னை மாநகரத்தில் மட்டும் 23 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

• மிக உயர் மின் அழுத்த இணைப்புக்களைப் பெற்றுள்ள (110 மற்றும் 230 கே.வி.) மின் இணைப்புகள் 800 மெகாவாட் வரை மின்சாரத்தை எடுத்துக் கொள்கின்றன. இவற்றிற்கு 24 மணி நேரமும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.

• 31 பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக பகிர்ந்தளிக்கப்படுவது 218 மெகாவாட் மின்சாரமாகும்.

• பெரிய வணிக நிறுவனங்கள் விளம்பரத்திற்காகவும், அலங்காரத்திற்காகவும் அதிக அளவு மின்சாரத்தினை எவ்விதக் கட்டுப்படும் இன்றி பயன்படுத்தி வருகின்றன. அதுபோன்றே குளிர்சாதன வசதியையும் அவசியத்திற்கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றன.

• உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு 40% மின் வெட்டு உள்ளது. மேலும், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை உள்ள காலத்தில் 10% க்கும் மேல் மின் பளுவை எடுக்கக் கூடாது என்பதற்கான தடையும் உள்ளது. இதன்மூலம் 2200 மெகாவாட் அளவிற்கு மாலை நேரத்தில் மின்பளு குறைந்திருக்க வேண்டும். அப்படியானால், மாலை 6 மணியில் இருந்து 10 மணி வரை தமிழகத்தில் மின்வெட்டு (load shedding) இருக்கக் கூடாது.

• திரைப்பட அரங்குகள், ஐஸ் ஃபேக்டரிகள் மற்றும் டீ எஸ்டேட்டுகளுக்கு மின்வெட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

• புதிதாக வரும் மிகப்பெரிய வணிக நிறுவனங்கள் ஒவ்வொன்றும் முழுமையான குளிர் சாதன வசதிக்காக 5 மெகாவாட் அளவிற்கான மின்சாரத்திற்கான மின் இணைப்பைக் கேட்கின்றன. இது தடையின்றி வழங்கப்பட்டும் வருகிறது.


சென்னையைத் தவிர்த்த தமிழகத்தின் பிற பகுதிகளில் உள்ள சிறு-குறு தொழில்கள் 16 மணி நேர மின்வெட்டால் முடங்கிப் போய்விட்டன. வழங்கப்படும் 8 மணி நேர மின்சாரமும் மனம்போன போக்கில் அரை மணி நேரத்திற்கும், ஒரு மணி நேர நேரத்திற்கும் வழங்கப்பட்டு வருவதால் இந்த 8 மணி நேர மின்சாரத்தையும் சிறு-குறு தொழில்களாலும், விவசாயத்தாலும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது.


இந்த நிலை, அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைப் பெருமளவு சீரழித்து விட்டது. இதன் பிரதிபலிப்புதான் இன்று பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டங்களாக வெடித்திருக்கின்றது. அரசும், ஆணையமும் இது எதையும் இன்றுவரை பொருட்படுத்தவில்லை. இப்பிரச்சினையைத் தீர்க்க, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் கீழ்க்கண்ட கோரிக்க்கைகளை முன்வைக்க வேண்டுகிறோம்:

• பழுதடைந்த மூன்று எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களையும், உற்பத்தி தொடங்கத் தயாராயுள்ள மூன்று அனல் மின் நிலையங்களையும் எந்த வித சாக்குப் போக்கும் கூறாமல் உற்பத்தி தொடங்க தமிழக அரசையும், மின்வாரியத்தையும் வலியுறுத்த வேண்டும்.

• இருக்கும் மின்சாரத்தைத் தமிழக மக்களிடையே நியாயமான அடிப்படையில் பிரித்தளிக்க இனி மேலாவது ஒழுங்குமுறை ஆணையம் செயல்பட்டு தன் கடமையை நிறைவேற்ற வலியுறுத்த வேண்டும்.


தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு இப்பிரச்சினையில் தமிழக மக்களுடன் இணைந்து பணியாற்றத் தயாராயிருக்கிறது.


அன்புடன்

கோவை. சா.காந்தி,

9 அக்டோபர் 2012 தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு

தொடர்புக்கு: 9443003111

17 August 2012

பணம்....

|5 comments

 
 

பணத்தை மதியுங்கள். பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது?
சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.
ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம் சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார். ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.

மறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான்.அவனுடைய அப்பா அந்த பணத்தை கசக்கி எறிந்தார் விட்டு போய் சாப்பிடு என்றார். மறுநாளும் உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை மறுபடியும் கசக்கி எறிந்தார் மூன்றாவது நாள் பணத்தை கசக்கி எரிய போகும் போது மகன் தாவி அதை வாங்கினான் . அப்போ அப்பா என்ன செய்கிறீர்கள் என்று கோபபட்டான் அவர் சொன்னார், ‘இன்றுதான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்’ ஆச்சரியமடைந்த அவன் எப்படி கண்டு பிடித்தீர்கள் என்றான்.
‘நீ உழைத்து சம்பாதிக்காத பணம் என்பதால் கசக்கி எறியும் போது நீ கவலைப் படவில்லை. அதுவே உன் உழைப்பு என்கிறபோது நீ துடித்துவிட்டாய். போய் சாப்பிடு. உழைப்பின் அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்’ என்றார் மலர்ந்த முகத்தோடு.


விற்பனைக்கே வராத செல்போன்கள் பற்றி விலை உட்பட எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எளிமையாக சொல்வ தென்றால் செலவு செய்வதற்கான வழிகள் தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் நம் குழந்தைகளுக்கு தெரியவில்லை.இன்றைய நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இதுதான்.


ஆயிரம் ரூபாய் தாளைக் கையில் கொடுத்து இதை செலவழிக்க 20 வழிகளை எழுதச் சொல்லுங்கள். இப்பொழுது அதை சம்பாதிக்கும் வழிகளை எழுதச்சொல்லுங்கள். வேலை பார்த்து சம்பாதிக்கலாம். பிஸினஸ் செய்து சம்பாதிக்கலாம் என்று பொதுவாக இல்லாமல் எப்படிப்பட்ட வேலை பார்த்து என்று விரிவாக எழுதச் சொல்லுங்கள்.ஏனெனில் சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது.

இப்படியெல்லாம் சொல்வதன் நோக்கம் இப்போதே அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் அதற்கான ஆற்றலை இப்போதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்.போட்டியில் ஜெயித்தால்தான் கோப்பை கிடைக்கும் என்றால்தான் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள் நாளை நாமும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பார்கள். குழந்தை கோப்பை கேட்கிறதே என்று நாம் கடையிலிருந்து வாங்கிக் கொடுத்துவிட்டால் ஒரு விளையாட்டு வீரன் உருவாகாமல் தடுத்து விட்டோம் என்று அர்த்தம்.
படிப்பை பற்றி தினமும் பேசுகிறோம்.வாழ்க்கையின ஆதாரமான பணத்தை பற்றி மாதம் ஒரு முறையாவது பேசுகிறோமா ? பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது? என்று விவாதித்திருக்கிறீர்களா ?

இதையெல்லாம் ஒருமுறை சொல்வதால் மட்டும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. பொறுப்புணர்வுடனும் பொறுமை உணர்வுடனும் அன்றாட நடவடிக்கைகளோடு இணைத்து இவற்றை கற்றுத்தர வேண்டும்.அப்பா சம்பாதிப்பதே தான் செலவு செய்யத்தான் என்றுதான் பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இதை மாற்ற சில எளிய டிப்ஸ்கள் :

பணத்தை மதியுங்கள்.

100 ரூபாய் கேட்டால் இது ஒரு தொகையே அல்ல என்று ரீதியில் அலட்சியமாக எடுத்து நீட்டாதீர்கள். மாறாக 100 ரூபாயா எதற்கு என்று கேட்டுவிட்டு யோசித்துவிட்டு கொடுங்கள்.

கேட்டபொதெல்லாம் தூக்கி நீட்டாதீர்கள். பணம் இருக்கு. ஆனால் அது வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. உனக்கு இரண்டு நாளில் தருகிறேன் என்று சொல்லுங்கள். காத்திருக்க பழக்குங்கள்.

பணத்தை வீட்டிற்குள் கண் கண்ட இடத்தில் எல்லாம் வைக்காதீர்கள். சட்டைப் பையில் வைத்து அப்படியே தொங்க விடாதீர்கள்.
பீரோவில்தான் பணம் வைப்பீர்கள் என்றால் வீட்டிற்குள் வந்ததும் அதில் வைத்து பூட்டுங்கள்.
பணத்தை மதிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்த இதெல்லாம் உதவும்.
உங்கள் வீட்டில் உள்ள தொகைக்கு அல்லது பர்ஸில் உள்ள தொகைக்கு எப்போதும் கணக்கு வைத்திருங்கள். கணக்கில்லை என்றால் (யார் எடுத்தாலும் தெரியாது. இதன்மூலம் யாரோ தைரியமாக தப்பு செய்யத் தூண்டுகிறீர்கள் என்று அர்த்தம்) உங்களுக்கே பணத்தின் அருமை தெரியவில்லை என்று அர்த்தம்.

காசோட அருமை தெரிஞ்சவங்கதான் நாங்கெல்லாம் என்றெல்லாம் பேசாதீர்கள். இதெல்லாம் அவர்களுக்கு உண்மையில் புரிவதில்லை.
ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள் உடல் ஊனமுற்றோர் இல்லங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லுங்கள். நல்ல சாப்பாடு என்பது யாராவது கொடுக்கும் நன்கொடையில்தான் என்பதை புரிய வையுங்கள்.பணத்தின் அருமையை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.

உங்கள் குழந்தையின் அறையில் பெரிய கவர் ஒன்றை தொங்கவிடுங்கள். அன்றாடம் அவர்கள் செலவு செய்த தொகைக்கான கணக்கு மற்றும் பில்களை அதில் சேகரிக்கச் சொல்லுங்கள்.மாதம் ஒருமுறை கணக்கு பாருங்கள். தினமும் பத்து ரூபாய்க்கு ஸ்நாக்ஸ் வாங்குவது பெரிதாகத் தெரியாது. ஆனால் மாதம் 300 ருபாய் ஸ்நாக்ஸுக்கே செலவு செய்திருக்கிறோம் என்கிற போது குழந்தைகள் தங்கள் செலவுகளை சீரமைக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.
பணத்தின் அருமை உணரப்படாததிற்கு வளர்ப்பு முறைதான் காரணம் என்பதற்கு இன்னொரு உதாரணம் சொல்கிறேன்.


சரி. எப்படித்தான் பணத்தின் அருமையை ஏற்படுத்துவது? முதலில் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள். நிச்சயம் உங்களால் உங்கள் குழந்தைகளுக்கு இதைச் சொல்லிக் கொடுக்க வேண்டாம். குழந்தைகளாகவே கற்றுக்கொள்ள உதவுங்கள் போதும்.
சரி. விசயத்திற்கு வருவோம். 100 ரூபாய் விலையில் ஒரு பொருளை குழந்தை கேட்கிறதென்றால் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள்.
அதற்கு பதில் தினம் ஒரு ரூபாய் கொடுங்கள். அதை சேர்த்துக்கொண்டே வந்து 100 வது நாளில் அதை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துங்கள். (கேட்கிற பொருளின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் பொறுத்து தினம் 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் என்று அதிகரிக்கலாம்).
இதனால் என்ன என்ன பயன்?
தினம் கிடைக்கிற அந்த ரூபாயை வேறு எதற்கும் செலவழித்து விடாமல் சேர்த்து வைப்பதால் மன உறுதி, சுயக்கட்டுப்பாடு வளரும். பொருளை வாங்க காத்திருந்த நாட்கள் அந்த பொருளின் மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கும்
.
டீன் பட்ஜெட்

இதே டீன் ஏஜ் வயது பையன் என்றால் குடும்ப வருமானத்திற்கு வரவு செலவு பட்ஜெட் தயாரிக்கச் சொல்லி உற்சாகம் கொடுங்கள். அதிலுள்ள நிறை குறைகளை சுட்டிக்காட்டுங்கள். வரவு செலவுகளை அவர்களை விட்டே செய்யச் சொல்லுங்கள். பேங்குக்கு அனுப்புங்கள். இதனால் பொறுப்புணர்வு, திட்டமிடும் திறன் ஆகியவை வளர்வதோடு சுயமதிப்பு உயரும்.பார்த்தவுடன் ஒன்றை வாங்க வேண்டும் என்று தோன்றும் வயதிலேயே அது அவசியமா எனின் அதை எப்படி வாங்குவது? என்பதை கற்றுக்கொடுத்துவிடவேண்டும்
. ஒரு பொருளை வாங்கவேண்டும் என்றால் குறைந்த பட்சம் நான்கு கடைக்காவது சென்று விசாரிக்கும்போது விலை, தர வித்தியாசத்தை உணர வேண்டும் என்ற பாடம் கிடைக்கும். இது சரியான பொருளை வாங்க அவசரப்படக்கூடாது என்பதையும் விசாரித்து வாங்கவேண்டும் என்ற மனோநிலையையும் இளம் வயதிலேயே ஏற்படுத்திவிடும்.எதை வாங்கச் சென்றாலும் அல்லது விற்பனைக்கு என்று வைக்கப்பட்டுள்ள எந்தப்பொருளை நீங்கள் கண்டாலும், அதற்கு மதிப்பு போடுங்கள். அதாவது அப்பொருளின் அடக்கவிலை என்னவாக இருக்கும் என்று மதிப்பு போடுங்கள். உதாரணத்திற்கு ஒரு பேனாவை பார்க்கிறீர்கள். அதில் விலை 50 ரூபாய் என்று போட்டிருக்கிறது.

உங்கள் குழந்தைகள் பணத்தைப் பற்றி என்ன புரிந்து வைத்திருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா ?
நாம் என்ன கற்றுத்தருகிறோம் என்பதை விட அதிலிருந்து அவர்கள் என்ன புரிந்து கொள்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
கீழ்க்கண்ட கேள்விகளை கொடுத்து உங்கள் குழந்தைகளுக்கு ஒரு டெஸ்ட் வையுங்கள்.

பணம் சம்பாதிப்பது சுலபமா? கஷ்டமா? என விளக்கு? உன் பெற்றோர்கள் பணம் சம்பாதிக்க படும் கஷ்டங்கள் என்ன? பணம் இல்லாதவர்கள் என்ன கஷ்டம் அனுபவிக்கிறார்கள்? தெரியாத ஊரில் பர்ஸை பறி கொடுத்தவர்கள் நிலை என்ன ?
அன்றைக்கு வருமானம் வந்தால்தான் அன்றைக்கு சாப்பிட முடியும் என்ற நிலையில் உள்ள தினக்கூலி நிலையில் உள்ள ஒருவருக்கு ஒரு நாள் வருமானம் வரவில்லை என்றால் அவர் நிலை என்ன?
தன் குடும்ப நிலை மறந்து நண்பர்கள் வைத்திருக்கிறார்கள் என்பதற்காக விலை அதிகம் உள்ள பொருளை வாங்குவது சரியா?
ஒரு மாத இடைவெளியில் மறுபடி இந்தக் கேள்விகளைக் கொடுத்து பதில் எழுதச் சொல்லுங்கள். பணத்தின் அருமை உணர்த்திய அருமை நினைத்து நீங்கள் காலரை தூக்கிவிட்டு கொள்ளலாம்.

உங்கள் குழந்தைகளிடம் நூறு ரூபாய் கொடுத்து நூறு பொருள் வாங்கச் சொல்லுங்கள். ஒரே பொருளை இரண்டு முறை வாங்கக்கூடாது என்பது முக்கிய கண்டிஷன்.
விலை உயர்ந்தவைகளையே பார்த்து பழகிய பல குழந்தைகளுக்கு இதன் மூலம் குறைந்த விலையில் உள்ள பொருட்கள் அறிமுகமாகும். மேலும் நான்கு கடை ஏறி பேரம் பேசி நூறு பொருள் வாங்கிய உடன் அவர்கள் முகத்தில் தோன்றும் வெற்றிக்களிப்பு இனி எல்லாவற்றையும் நம்மால் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும்.

பணத்தின் அருமை தெரியாமல் பலரும் பணத்தை வீணாக்கும் தருணங்களை பட்டியலிடச் சொல்லுங்க…ள்ஸ
உங்கள் சிந்தனையைத் தூண்ட, இங்கே சில உதாரணங்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது.உத
ாரணங்கள் மூன்று.
ஹோட்டலில் தேவைக்கும் அதிக உணவு வாங்கி வீணடிப்பது.
புதிதாக வாங்கிய விலை உயர்ந்த செல்போன், அலட்சியமாக கையாண்டதால் கீழே விழுந்து உடைவது
நன்றி
Face Book இன்று ஒரு தகவல் பக்கம்


18 July 2012

வருகைக்கு நன்றி....

|5 comments

சில தவிற்க்க இயலாத காரணங்களால் இந்த தளத்தில் புத்தகப் பதிவேற்றம் நிரந்திரமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இருந்தாலும் என்னை நம்பி வரும் வாசகர்களுக்காக புத்தகங்களை கீழ்கண்ட தளத்திலிருந்து பதிவிறக்கிகொள்ளலாம்.

ARRKAY

TECHRENU

CLEANINDIANS



 அடுத்த பதிவு விரைவில்....




9 July 2012

குங்குமம் 16-07-2012 Kungumam

|0 comments



புதிய தலைமுறை கல்வி 09-07-2012 Puthiya Thalaimurai Kalvi

|1 comments




8 July 2012

குமுதம் ஜோதிடம் 13-07-2012 Kumudam Jothidam

|0 comments


 



  


நாணயம் விகடன் 15-07-2012 Nanayam Vikatan

|0 comments






வாரமலர் 08-07-2012 Vaaramalar

|0 comments



 



புதிய தலைமுறை 05-07-2012 Puthiya Thalaimurai

|0 comments




பால ஜோதிடம் 07-07-2012 Balajothidam

|0 comments



 



7 July 2012

ஜூனியர் விகடன் 11-07-2012 Junior Vikatan

|0 comments