6 August 2008

சூப்பர் ஸ்டாருக்கு சுளீர்...

துநாள் வரை எங்களால் மதிக்கப்படுபவராக இருந்த ரஜினிகாந்த் அவர்களுக்கு...

உங்களை எங்களுள் ஒருவராக, தமிழராகத்தான் நினைத்துக்கொண்டு இருந்தோம். ஆனால், பல நேரங் களில் 'நான் அப்படி இல்லை' என்று நிரூபித்தீர்கள். 'பாபா' பட வெளியீட்டின்போது பா.ம.க-வினர் உங்களுக்கு ஆட்டம் காட்டியபோது, 'தேர்தல் வரட் டும்...' என்று முதலில் சவால் விட்டுவிட்டு பிறகு சத்யநாராயணா மூலம் சமரச அறிக்கை வெளியிட்டு பிரச்னையை அப்படியே மூடினீர்கள்.

இன்று வரையில் ஏதாவது ஒரு விஷயத்தில் உறுதியாக இருந்திருக்கிறீர்களா? முதலில் ஜெய லலிதாவை வசைபாடினீர்கள். பிறகு, அவரை 'தைரியலட்சுமி' என்று ஸ்துதி செய்தீர்கள்.

இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் எடுப்பார் கைப்பிள்ளையாகவே இருக்கப் போகிறீர்கள்? பிறர் ஏற்றிவிடும் உசுப்புகளுக்கெல்லாம் எத்தனை காலம் ரணகளப்படப் போகிறீர்கள்? உங்கள் படங்களில் நீங்கள் சித்திரிக்கப்படுவதைப்போல் நீங்கள் உங்களை உண்மையிலேயே சூப்பர் மேன் என்று நினைத்துக்கொள்கிறீர்களா?

நீங்கள் வாய்ஸ் கொடுப்பது ஆரம்பத்தில் சீரியஸாகவே இருந்தது. ஆனால், போகப் போக வடிவேலு ஜோக்கையே ஓவர்டேக் செய்து விட்டது. அடிப்படை அரசியலறிவு குறித்த தெளிவான பார்வை இல்லாத நீங்கள், போகிற போக்கில் அரசியல் விமர்சனங்களை அள்ளி வீசுவது காமெடியின் உச்சம். ஓட்டுப்போட்டு விட்டு வாக்குச்சாவடி வாசலிலேயே 'இன்ன கட்சிக்குத்தான் ஓட்டுப் போட்டேன்' என்று கடந்த தேர்தலில் நீங்கள் வெளிப்படையாகச் சொன்னது ஜனநாயகத்துக்கும் சட்டத்துக்கும் விரோதமானது என்று உங்களுக்குத் தெரியுமோ... தெரியாதோ? ஆனால், அதுகுறித்து இதுவரை நீங்கள் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை. இதுதான் உங்கள் அரசியல் ஞானமோ?

சினிமாவில் 'ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக்காசு கொடுத்தது தமிழல்லவா' என்று பில்ட் அப்களைக் கொடுக்க வேண்டியது... தமிழன் கொடுத்த தங்கக் காசுகளைக் கர்நாடகத்தில் முதலீடு செய்வதாக குக்கிராமத்த்து டீக்கடை வரை செய்தியாகிக் கிடக்கிறது. நிஜ வாழ்க்கையிலும்கூட நீங்க நன்றாகத்தான் நடிக்கிறீர்கள், சார்!

தேசிய கட்சிகளைச் சேர்ந்த அரசியல் வாதிகளைப் போல தண்ணீர்ப் பிரச்னை வரும்போதெல்லாம் உங்களுக்குச் சிக்கல் தான். தமிழகமா, கர்நாடகமா என்று தத்தளித்துப் போய்விடுகிறீர்கள். அந்த மாதிரி இக்கட்டான நேரத்திலெல்லாம் உங்களுக்குப் பக்கபலமாக நின்றவர்கள் நாங்கள் தான்.

ஆனால், 'குசேலன்' படத்துக்காக கர்நாடக மக்கள்கிட்ட நீங்க வருத்தம் தெரிவிச்சு, நீங்கள் அடகு வைத்திருப்பது உங்கள் தன்மானத்தையும் தமிழ் மக்களின் மானத்தையும்! உங்களால் ஆதாயப்படுபவர்கள் வேண்டுமானால் அதை ஆதரிக்கலாம். உங்கள் தலை உருட்டப்படும்போது எல்லாம் கடைக்கோடி தமிழன்கிட்ட இருந்து, 'எங்க தலைவனை ஏண்டா இம்சை பண்றீங்க'ன்னு ஓங்கி ஒலிக்கிற குரல், இந்தப் பிரச்னையில எங்கேயும் கேட்கவில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஒகேனக்கல் பிரச்னையில் நீங்கள், 'பொதுவா இருக்குற தண்ணீரை கொடுக்க முடியாதுன்னா, அவங்களை உதைக்கவேணாமா?' என்று உணர்ச்சி வசப்பட்டீர்கள். உடனே, தமிழகமே உங்களை தூக்கிப் பிடித்தது.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் தொடர்பாக நடத்தப்பட்ட உண்ணாவிரதம் முடிந்த சில நாட்களில், 'கர்நாடகத்தில் 'குசேலன்' படத்தை வெளியிடத் தடை போடப்போவதாக மிரட் டல்கள் வருகிறதே' என்று கேள்வி எழுந்தபோது, ''உலகம் முழுக்க வெளியாகிற என் படம் கர்நாடகத்தில் வெளியாகாவிட்டாலும், எனக்குக் கவலை இல்லை'' என்று நீங்கள் சொன்னபோது, 'நிஜமான தமிழன் நீங்கதான்' என புல்லரித்துப் போய்விட்டோம்.

ஆனால், கன்னட இனவெறி அமைப்புகளும், கன்னட திரையுலகமும் சில தினங்களுக்கு முன்பு 'குசேலனை திரையிட அனுமதிக்க மாட்டோம்... மீறி திரையிட்டால், தியேட்டர்களைக் கொளுத்துவோம்' என கொக்கரித்ததும் கன்னட திரையுலகினருக்கு ஒரு அவசரக் கடிதம் எழுதி உங்கள் பேச்சுக்கு வருத்தப்படுவதாக ஒரு ஸீன் போட்டீர்கள். கன்னடத் திரையுலகம் உங்களை மன்னிக்கத் தயாராக இருந்தாலும், கன்னட வெறியர்கள் விடுவதாக இல்லை; கலாட்டாக்களில் இறங்கி தங்கள் வன்முகத்தைக் காட்டினர்.

உடனே நீங்கள் ஆகஸ்ட் 2-ம் தேதி சென்னை யில் நடந்த 'குசேலன்' படக் கலைஞர்களைக் கௌரவிக்கும் விழாவில், ''கன்னட மக்கள் அனைவரையும் குறிப்பிடும்படி 'அவங் களை உதைக்க வேணாமா' என நான் பேசியிருக்கக்கூடாது. வன்முறையில் ஈடுபடுபவர்களை உதைக்கணும் என்று பேசியிருக்கவேண்டும். கர்நாடக மக்களி டம் பாடம் கற்றுக்கொண்டேன்... இனி எச்சரிக்கையாகப் பேசுவேன்''னு தலை குனிஞ்சு பேசியதை எந்தவகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.

'நடிகனை நடிகனா மட்டும் பார்க்க வேண்டியதுதானே'னு உங்களுக்கு ஜால்ரா போடுறவங்களெல்லாம் கேட் கலாம். நாங்கள், உங்களை நடிகராக மட்டும் பார்க்கவில்லை. எங்களில் ஒருவராகத்தான் பார்த்தோம். அதனால்தான், எம்.ஜி.ஆருக்கு அடுத்த படியாக எங்கள் இதய சிம்மாசனத்தில் உங்களை உட்கார வைத்தோம். ஏற்றிவிட்ட ஏணியை எட்டி உதைத்த கதையாகத் தமிழர்களின் மொத்தத் தன்மானத்தையும் கன்னடர்களிடம் அடகு வைத்திருக்கிறீர்கள்.

எத்தனையோ சினிமாக்காரர்களை இன, மொழி வேறுபாடு பார்க்காமல்தான் தமிழகத்தில் ஆதரிக்கிறோம். அவர்களின் படத்தை ஓட வைக்கிறோம். ஆனாலும், எங்களுக்குக் கிடைத்த வரம் என்றுதான் உங்களை நினைத்தோம். உங்கள் பட ரிலீஸ்தான் எங்களுக்குப் பொங்கல், தீபாவளி! உங்கள் வார்த்தைகள்தான் எங்களுக்கு வழிகாட்டி. அதனால்தான் நீங்கள் அரசியலுக்கு வரவேண்டும்... எங்களையெல்லாம் ஆளவேண்டும் என்று நினைத்தோம். ஏனோ, கடைசிவரைக்கும் கமுக்கமாக இருந்துவிட்டீர்கள். அப்போதும் நாங்கள் உங்கள் பக்கமே இருந்தோம். ஆனால், உங்கள் படம் லாபகரமாக ஓடவேண்டும் என்பதற்காக எங்கள் தன்மானத்தையே விட்டுக்கொடுக்கிற அளவுக்கு நீங்கள் எப்போது இறங்கி வந்தீர்களோ அப்போதே தெரிந்துவிட்டது, நீங்கள் எவ்வளவு பெரிய பிசினஸ் பேர்வழி என்று! இத்தனை நாள் எங்கள் மண்ணில் ஒரு வியாபாரியாகத்தான் வாழ்ந்தீர்களா? 'என்னை நம்பிப் படம் எடுத்த தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்றுதான் வருத்தம் தெரிவித்தேன்' என்று நீங்கள் சொல்வதை நம்ப இனியும் நாங்கள் இளித்தவாயர்கள் அல்ல. கன்னடத்தில் 'குசேலன்' ஓடாவிட்டால் எவ்வளவு நஷ்டமாகும் என்று எங்களிடம் சொல்லியிருக்கலாம். உண்டியல் குலுக்கியாவது உங்கள் மடியில் கொண்டுவந்து கொட்டியிருப்போம். உங்ககிட்டதான் பண வசதியே இல்லாமப் போச்சு! சம்பாதித்த அவ்வளவு பணத்தையும் நதிநீர்த் திட்டத்துக்கு ஒரு கோடி ஒதுக்கியது(?) மாதிரி தமிழக நலனுக்காக செலவு பண்ணியே அழித்துவிட்டீர்கள்!

'குசேலன்' படத் தயாரிப்பாளர்கள் நஷ்டப்பட்டுவிடுவார் கள் என்று கன்னட மக்களிடம் கருணைக் கோரிக்கை வைத்தீர்களே... 'தலைவர் படம் பிய்ச்சுக்கிட்டுப் போகும்' என்று நம்பி, பல லட்சங்களை முதலீடாப் போட்டு ரசிகர் மன்ற ஷோ எடுத்து நடத்திய அத்தனை மாவட்ட ரசிகர்களும் கையைச் சுட்டுக்கொண்டு தவிப்பது உங்களுக்குத் தெரியுமா? பட ரிலீஸன்று கொடி பிடிக்கவும், கும்பாபிஷேகம் நடத்தவும்தான் நாங்கள் உங்களுக்குத் தேவை. மற்றபடி, நாங்கள் கையைச் சுட்டுக்கொண்டால் என்ன... தலையை வெட்டிக்கொண்டால் என்ன?

நீங்கள் கர்நாடக மக்களிடம் வருத்தம் தெரிவித்ததற்கு நாங்கள் ஏன் அவமானப்படுகிறோம் என்றால், இப்போதும் உங்களைப் பச்சைத் தமிழனாக நினைப்பதால்தான். இல்லை என்றால் 'ஒரு கன்னடத்து ஆள் கன்னடத்து மக்கள்கிட்ட மன்னிப்புக் கேட்டதில் என்ன ஆச்சர்யம்' என்று நினைத்துக்கொண்டு எங்கள் வேலைகளில் மூழ்கியிருப்போமே...! அப்ப... நீங்க தமிழகம்தான் எனக்கு எல்லாமே என்று சொல்றதெல்லாம் 'குசேலன்' படத்துல வர்ற மாதிரி கெஸ்ட் ரோல்தானா?

- இப்படிக்கு
நேற்று வரை உங்கள் ரசிகனாக
இருந்த தமிழன்.

1 comments:

  • Endhiran Rajini says:
    24 August 2009 at 9:13 am

    முதலில் எதுவேணுமென்றாலும் எழுதலாம் என்று எழுதுவதை தயவு செய்து நிறுத்திக்கொள்ளுங்கள்.

    அதுவும் இப்பொழுதெல்லாம் ரஜினி பற்றி எழுதுவது எல்லோருக்கும் அல்வா சாப்பிடுவது மாதிரி ஆகிவிட்டது.

    ”'தலைவர் படம் பிய்ச்சுக்கிட்டுப் போகும்' என்று நம்பி, பல லட்சங்களை முதலீடாப் போட்டு ரசிகர் மன்ற ஷோ எடுத்து நடத்திய அத்தனை மாவட்ட ரசிகர்களும் கையைச் சுட்டுக்கொண்டு தவிப்பது உங்களுக்குத் தெரியுமா?” - ஏதாவது இதற்கு உங்களிடம் சான்று இருக்கிறதா..? முதலில் அதை வெளியிடுங்கள். பிறகு உங்களுக்கு நான் பதில் சொல்கிறேன்.

    நன்றி !