அதை எப்படி உருவாக்குவது?
''பங்கு முதலீட்டுக் கலவை ஒன்றை உருவாக்க குறைந்தபட்சம் 2 முதல் 4 லட்சம் ரூபாய் போதுமானது. இந்தப் பங்கு முதலீட்டுக் கலவையில் குறைந்தபட்சம் 20 முதல் 25 பங்குகளாவது இருக்கவேண்டும். பங்கு முதலீட்டுக் கலவையை உருவாக்க துறைகளின் அடிப்படையிலே முதலீடுகளை அமைத்துக்கொள்வது நல்லது. துறைகளைப் பொறுத்தவரை நீண்டகாலத்தில் வளர்ச்சி கொண்டவை. ஆனால், எப்போதும் எல்லாத் துறையும் வளர்ச்சியில் இருக்காது. இவை ஒரு சுழற்சியின் அடிப்படையில் மாறிமாறி வரும். முதலீடு செய்யும்போது தற்போது எந்தத் துறைகள் வளர்ச்சிப் பாதையில் உள்ளது எனப் பார்க்கவேண்டும். அதில் முன்னணியில் உள்ள நிறுவனங்களாகத் தேர்வு செய்யவேண்டும். இது எளிமையாக இருக்கும்.
உதாரணமாக, இரண்டு லட்சம் ரூபாய் முதலீடு என்றால், அதனை பத்து துறைகளில் கலந்து முதலீடு செய்யலாம். ஒரு நிறுவனப் பங்கில் அதிகபட்சம் பத்தாயிரம் ரூபாய் முதலீடு என இருபது பங்குகளில் முதலீடு செய்யலாம். அவ்வாறு தேர்வு செய்யும் நிறுவனங்கள் அத்துறையில் மிகச்சிறப்பாகச் செயல்படும் நிறுவனங்களாக இருக்கவேண்டும். சந்தை சரிவின்போது இவற்றின் விலைகளும் சரிந்தாலும், மற்ற பங்குகளைவிட விரைவில் மீண்டும் அதிகரிக்கும்.
அல்லது நிறுவனங்களின் அடிப்படையில் சந்தையில் உள்ள பத்து பெரிய நிறுவனப் பங்குகளில் 50 சதவிகிதம் முதலீடு செய்யலாம். மீதமுள்ள 50 சதவிகிதத்தை பி.எஸ்.இ-500 பிரிவில் உள்ள சிறந்த 10 பங்குகள் என பங்கு முதலீட்டுக் கலவையை உருவாக்கலாம்.
தேர்வு செய்துள்ள நிறுவனப் பங்கு-களின் விலை எப்போது குறைவாக உள்ளதோ, அப்போதுதான் முதலீட்டை துவக்கவேண்டும். கையில் பணம் இருப்பதற்காக அவசரப்பட்டு ஏதாவது ஒரு பங்கில் முதலீடு செய்யக்கூடாது. பொறுமை அவசியம் தேவை. குறிப்பாக சரியும் சந்தையில் நம்மால் சிறந்த பங்கு முதலீட்டுக் கலவை ஒன்றை உருவாக்கிக் கொள்ளமுடியும். அந்தவகையில் இப்போதுள்ள சந்தை முதலீட்டாளர்களுக்கு நல்லதொரு வாய்ப்பு.
ஒரு நிறுவனப் பங்குக்கு பத்தாயிரம் ரூபாய் என்று முடிவாகிவிட்ட நிலையில், அவற்றை ஒரே தவணையில் முதலீடு செய்யக்கூடாது. இந்தத் தொகையை நான்காகப் பிரித்து முதலீடு செய்யவேண்டும். விலை குறைந்து இருக்கும்போது முதலில் 2,500 ரூபாய்க்கு பங்குகளை வாங்கவேண்டும். அதற்கு அடுத்து விலை குறையும்போது அதே நிறுவனப் பங்கில் இரண்டாவது முறையாக 2,500 ரூபாயை முதலீடு செய்யவேண்டும். இந்த முறையிலேயே மீதமுள்ள பணத்தையும் 2,500 ரூபாய் ஆகப் பிரித்து அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக முதலீடு செய்துவர வேண்டும். இது ஒரு நிறுவனப் பங்குக்கான முதலீட்டு முறை. இது போலவே மொத்தம் இருபது பங்குகளில் முதலீட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த முறையில் பங்குக் கலவை ஒன்றை உருவாக்க ஆறு மாதம் முதல் பன்னிரண்டு மாதம் வரை பிடிக்கும்.
இவ்வாறு உருவாக்கிய பங்குக் கலவையை மூன்று ஆண்டுகள் வரை வைத்திருக்க வேண்டும். இது கிடைக்கும் லாபத்தை அதிகப்படுத்துவதற்கான காலம். இதற்கிடையில் சந்தையின் புள்ளிகள் சரியலாம், உயரலாம். பங்குக் கலவை மூலம் ஆண்-டுக்கு சராசரியாக 25 முதல் 30% வருமானத்தை எதிர்பார்க்கலாம்'' என்ற பிரபாகர் பங்குகளை விற்பதற்கான தருணம் பற்றியும் சொன்னார்.
''முதலீட்டுக் காலம் மூன்று ஆண்டுகள் என்றாலும் விற்பதற்காக அவ்வளவு நாள் காத்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அந்த வருமானம் இடைப்பட்ட காலத்தில் கூட கிடைக்கலாம். அப்போது எந்தப் பங்கு லாபம் கொடுக்குமோ அதில் ஐம்பது சதவிகிதப் பங்குகளை விற்று லாபம் எடுத்து வெளியேறலாம். மீதமுள்ள பங்கை பங்குக் கலவையில் தொடர்ந்து வைத்திருக்கலாம். லாபத் தொகையைக் குறைந்த விலைக்கு வரும் வேறு நல்ல வளர்ச்சியுள்ள பங்குகளில் முதலீடு செய்யலாம். இந்த முதலீட்டு முறையானது விற்க, வாங்க என தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும். நம் இலக்கு மூன்று வருடங்கள். அந்தச் சமயத்தில் எவ்வாறு முதலீடு செய்தோமோ அதே முறையில் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுக்கவேண்டும்.
செய்த முதலீடுகளை வருடத்துக்கு ஒருமுறை மறுஆய்வு செய்து பார்க்கவேண்டும். வளர்ச்சி உள்ள துறைகளாக இருந்தவை இப்போது தலைகீழாக மாறியிருக்கலாம். அந்தத் துறைக்குச் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ விஷயங்கள் நடந்திருக்கலாம். அந்த நிறுவனப் பங்குகளை வேறு நிறுவனம் அல்லது வேறு துறைகளுக்கு மாற்றிக்கொள்ளலாம். அவ்வாறு மாற்றும்போது நஷ்டம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நல்ல முதலீட்டு ஆலோசகர்கள் உதவியுடன் இதைச் செய்வது நல்லது. அதேபோல் வெளியில் எடுக்கும் பணத்தையும் திட்டமிடாமல் ஏதாவது ஒரு பங்கில் முதலீடு செய்யக்கூடாது'' என்றவர், முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்களைப் பட்டியலிட்டார்.
ஒரு துறையில் இரண்டு பங்குகளுக்கு மேல் முதலீடு செய்யக்கூடாது.
நிறுவனம் தொடர்ந்து டிவிடெண்ட் கொடுத்து வந்துள்ளதா, குறிப்பாக ஒரு பங்கின் சந்தை விலைக்கு எத்தனை சதவிகிதம் டிவிடெண்ட் கொடுத்துள்ளது என்று கவனிக்கவேண்டும்.
சந்தையில் அதிகமாக வர்த்தகமாகும் பங்குகளாகத் தேர்வு செய்யுங்கள்.
உங்களுக்குத் தெரியாத அதே சமயம் சிறிய நிறுவனங்களில் ரிஸ்க் எடுக்காதீர்கள்.
உற்பத்தியைத் தொடங்காத நிறுவனங்களை இந்தக் கலவையில் சேர்க்காதீர்கள்.
இதர வருமானத்தால் அதிக லாபம் பெறும் நிறுவனப் பங்குகளைத் தவிர்த்து விடுங்கள்.
விற்பனை (நெட் சேல்ஸ்) அதிகம் உள்ள நிறுவனங்களாகத் தேர்வு செய்யுங்கள்.''
நன்றி, விகடன்.
0 comments:
Post a Comment