8 July 2008

செல்பேசி பயனர்களை அச்சுறுத்தும் ஹேக்கர்கள்

நம் நாட்டில் மாதம் தோறும் பல லட்சம் செல்போன் இணைப்புகள் புதிதாக பெறப்படுகின்றன. இதில் மற்றவர்களுடன் பேசலாம் என்றாலும், பெரும்பாலானவர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவது எஸ்.எம்.எஸ் சேவை தான்.

தற்போது இந்த எஸ்.எம்.எஸ் பயன்படுத்தி ஹேக்கர்கள் (Hackers), செல்போன் பயனாளர்களை சொந்த நிதி விவரங்களை திரட்டுவது உள்ளிட்ட மோசடி வேலைகளில் கவனம் செலுத்தக் கூடும் என்று சைபர் பாதுகாப்பு நிறுவனங்கள் எச்சரிக்கை செய்துள்ளது.

சமீபத்தில் வடஇந்தியாவைச் சேர்ந்த ஒரு செல்பேசி பயனாளருக்கு வந்த எஸ்.எம்.எஸ்-ல் பிரபல நிறுவனத்தின் மொபைல் பரிசுப் போட்டியில் தங்களுக்கு சுமார் ரூ.12 கோடி பரிசு விழுந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தொகையைப் பெற ஒரு சர்வதேச தொலைபேசி எண்ணைக் கொடுத்து தொடர்பு கொள்ளுமாறு அந்த எஸ்.எம்.எஸ். தெரிவித்தது. முதலில் உற்சாகமடைந்த அந்த நபர், பிறகு யோசித்துப் பார்த்தார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த பிரபல நிறுவனத்தின் எந்தப் பொருளையும் தாம் பயன்படுத்தாத போது எதற்கு இதுபோன்று எஸ்.எம்.எஸ். வருகிறது என்று சந்தேகம் கொண்டார்.

இச்சம்பவம் தற்போது செல்போன் பயனாளர்களை எச்சரிக்க உதவி புரிந்துள்ளது. அதாவது இதுபோன்ற நம்பிக்கையூட்டி செல்போன் வாடிக்கையாளர்களை ஏதாவது எண்ணை தொடர்பு கொள்ளச் செய்து தகவல்களைப் பெற்று கிரெடிட் கார்டு, வங்கிக் கணக்கு மோசடிகளில் ஈடுபடலாம் என்று செக்யூரிட்டி நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

கார்ட்னர் வெளியிட்டுள்ள தகவலின் படி இதுபோன்ற மோசடிகளால் உலகம் முழுதும் பாதிக்கப்பட்ட ஒரு தனி நபர் 1,244 டாலர்கள் வரை நஷ்டமடைகிறார் என்று தெரிவித்துள்ளது.

இதனால் இந்தியா செல்போன் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகபட்ச எல்லைகளை தொடவுள்ள நிலையில் இந்த மோசடிகள் கணினித் துறையிலிருந்து செல்போன்களுக்கு மாறலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட வடஇந்தியருக்கு வந்த அந்த ஏமாற்று எஸ்.எம்.எஸ். இதற்கு முன்னோடி என்று ஏஷியன் ஸ்கூல் ஆஃப் சைபர் லா தலைவர் ரோஹாஸ் நாக்பால் தெரிவித்துள்ளார்.

மேலும் ஒரு எண்ணின் தரவுகளை மற்றொரு நபருக்கு தெரிவிப்பது பற்றிய விதிமுறைகள் இந்யாவில் மிக பலவீனமாக இருக்கிறது என்றும் இந்த துறையை சார்ந்தவர்கள் கருதுகின்றனர்.

வரும் காலங்களில் புதுவகை செல்பேசிகள் ஒரு முழு அளவிலான கணினிப் பயன்பாடுகளாகவே மாறும் சூழ்நிலையில் இது போன்ற அச்சுறுத்தல்கள் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளை சேவை வழங்குவோரின் உதவியுடன், புதிய விதிமுறைகளையும், கண்டுபிடிப்புத் தொழில் நுட்பங்களையும் மேம்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

0 comments: