24 May 2008

பைக் ஓட்ட 10 கட்டளைகள்!

1மிதமான வேகத்தில் சீராக ஓட்டுங்கள்!

எப்போதும் மணிக்கு 45-55 கி.மீ வேகத்திலேயே செல்லுங்கள். உங்கள் மொத்தப் பயண நேரத்தில் பெரிய வித்தியாசம் எதுவும் இருக்காது. வேகமாகச் செல்லும்போது, மாற்றி மாற்றி பிரேக்கை அழுத்தியும் ஆக்ஸிலரேட்டரை முறுக்கியும் ஓட்ட நேரிடும். இப்படி வேகமாக ஓட்டினால், ஏராளமான எரிபொருள் விரயமாகும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2தேவை இருந்தால் மட்டும் பிரேக்கைப் பயன்படுத்துங்கள்!

ஒரு நல்ல ரைடரால் நிற்க வேண்டிய இடங்களைச் சரியாகக் கணிக்க முடியும். வேகமாகச் செல்லும் பைக்கில் பிரேக்கை உபயோகிக்கும்போது, சக்தியைப் பெருமளவில் விரயம் செய்கிறோம். வளைவுகளை முன்கூட்டியே கவனித்துச் சென்றால், பிரேக்கை உபயோகிக்காமல் செல்ல முடியும்.

3கிளட்ச்சைக் கைவிடு!

தேவையில்லாமல் கிளட்ச்சோடு பின்னிப் பிணைந்து, அதைப் பிடித்துக்கொண்டே பைக் ஓட்டுவதைத் தவிர்த்துவிடுங்கள். இந்தப் பழக்கம் பெட்ரோலைக் குடித்துவிடும்.

4ஏர் பில்டரை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள்!

இன்ஜின் மூச்சு விடுவதற்குக் காற்றை அனுப்புவது, இந்த ஏர் பில்டர்தான். தூசு துரும்புகள் இன்ஜின் பாகங்களை சீக்கிரம் தேய்மானத்துக்கு உட்படுத்தும். அதோடு, தூசு புகுவதால் ஏற்படும் கார்பன் படிவம் சைலன்ஸரை அடைத்துக்கொண்டு, இன்ஜினை திணற வைக்கும். இதனால், பைக் பர்பாமென்ஸ் பாதிக்கப்படும்.

5டயரின் காற்றழுத்தத்தை சோதியுங்கள்!

காற்றுக் குறைவான டயர்களால் பெட்ரோல் தேவை அதிகமாகிறது. 25 சதவிகிதம் காற்றுக் குறைவான டயர்களால், 5 சதவிகிதம் அதிக எரிபொருள் தேவையும், டயர்களின் ஆயுட்காலம் 25 சதவிகிதம் குறைவதும் ஏற்படும். அதே போல், தேய்ந்துபோன டயர்களாலும் பெட்ரோல் விரயமாகும் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

6பெட்ரோல் லீக் ஆவதைச் சோதியுங்கள்!

பைக்கின் பெட்ரோல் டேங்க், கார்புரேட்டர் மற்றும் ப்யூல் லைன் (Fuel Line) என பெட்ரோல் பயணிக்கும் அத்தனை இடத்தையும் சரிவரச் சோதியுங்கள். ஒவ்வொரு துளியாக வடிந்தால்கூட ஒரு நாளைக்கு 5 1/2 லிட்டர் எரிபொருள் விரயமாகிவிடும்!

7சிக்னல்களில் இன்ஜினை ஆப் செய்யுங்கள்!

ஐடியலில் பெட்ரோல் பெருமளவு விரயமாகும். ரயில்வே கேட், போக்குவரத்து நெரிசல், சிக்னல்கள் ஆகியவற்றைக் கடக் கும்போது பைக்கை ஆப் செய்து எரிபொருளைச் சேமியுங்கள்.

8இன்ஜினை நல்ல கண்டிஷனில் வைக்கவும்!

அவ்வப்போது இன்ஜினைச் சரியாக டியூன் செய்துகொண்டால், 6 சதவிகிதம் வரை பெட்ரோலைச் சேமிக்கலாம். பைக்கில் அதிகப் புகை வெளியானாலோ, இழுவைத் திறன் குறைந்தாலோ, உடனடியாக சர்வீஸ் சென்டருக்குப்போய் இன்ஜினைச் சோதியுங்கள்!

9பேட்டரியை அவ்வப்போது சோதியுங்கள்!

எலெக்ட்ரிகல் உபகரணங்கள் எப்போதும் நல்ல நிலையில் இருப்பது முக்கியம். எனவே, ஒரிஜினல் உதிரி பாகங்களை மட்டுமே வாங்கிப் பொருத்துங்கள்.

10அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் சென்டரில் பைக்கை சர்வீஸ் செய்யுங்கள்!

உங்கள் பைக்கின் முக்கியச் செயல்பாடுகள் பற்றி நன்கு அறிந்த சர்வீஸ் சென்டரில் சர்வீஸ் செய்வது, நீங்கள் கொடுக்கும் பணத்துக்கும் வாகனத்துக்கும் நன்மை பயக்கும்!


--நன்றி விகடன்

1 comments:

  • Anonymous says:
    27 May 2008 at 12:49 pm

    அருமை நண்பரே! மிகவும் பயனுள்ள தகவல்கள்!