23 May 2008

சலாம் ஜெய்ப்பூர்!

தீவிரவாதிகள் 12 நிமிடங்களுக்குள் அடுத்தடுத்து ஏழு வெடிகுண்டுகளை ஜெய்ப்பூரில் வெடிக்கச் செய்தாலும் இறுதியில் ஜெயித்தது ஜெய்ப்பூர்வாசிகளே! முதல் குண்டு வெடித்தது, ஜெய்ப்பூரின் பிரசித்தி பெற்ற ஹனுமன் கோயில் அருகில். அடுத்தடுத்து குண்டு வெடித்த இடங்கள் அனைத்தும் இந்து மதத்தினர் அதிகமாகப் புழங்கும் இடங்களில்! குண்டுகள் வெடித்த வேகத்தில் இந்துமுஸ்லிம் மக்கள் வெறிகொண்டு, வெடிகுண்டுகளைக் காட்டிலும் வேகத்தோடு மோதிக்கொள்வார்கள் என்பது தீவிரவாதிகளின் கணக்கு. ஆனால், வெடிகுண்டு நெருப்புக்கும், தீவிரவாதிகளின் கணக்குக்கும் ஒரு சேர தண்ணீர் ஊற்றி அணைத்துவிட்டார்கள் ஜெய்ப்பூர் மக்கள்.

ஜெய்ப்பூருக்கு இது புதுசு! வெடிகுண்டுகள் வெடித்தவுடன், பழக்கம் இல்லாததால், 'காயம் அடைந்தவர்களுக்கு உதவவேண்டும்' என்பதைத் தவிர, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்றே அவர்களுக்குத் தெரியவில்லை.
சாதாரண சைக்கிள்களை வைத்துக்கொண்டு படு ஹைடெக்காக குண்டுகளை வெடிக்கச் செய்துள்ளனர் அந்த 'மூளை யுள்ள முட்டாள்கள்'! பத்து சைக்கிள்களை விலைக்கு வாங்கி செல்போன், டைம்பீஸ் மூலமே குண்டுகளை இயக்கிய அந்த இம்சை இயக்கத்தவர்கள், இந்தத் திட்டத்தைக் கச்சிதமாக பிளான் செய்தது இரண்டு மாதங்களுக்கு முன்பே! 'இந்தியன் முஜாகிதீன் கள்' என்று தங்களை அடையாளப்படுத்திக்கொள்பவர்கள், ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புகளுக்கு பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர். குண்டுகள் வெடித்த ஆரம்ப அதிர்வுகள் அடங்கிய பிறகு, 'ஏன் குண்டுவைத்தோம்' என்று தங்கள் தரப்பு விளக்கமாக அவர்கள் அனுப்பிய இமெயில் கடிதம் ஒரு மாதத்துக்குமுன்னரே தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த அளவுக்கு பக்கா பிளானோடு செயல்பட்டு இருக்கிறார்கள்!


காவல் துறையினர் வழக்கம் போல வழவழாதான்! எட்டு மாதங்களுக்கு முன்பே, 'ஹிட் லிஸ்ட்'டில் இருக்கிறது ஜெய்ப்பூர் என்ற துப்பு கிடைத்தும், துப்புர வாக விசாரிக்காமல் விட்டார்கள். எந்த அதிரடி நடவடிக்கைகளும் எடுக்க வழியில்லாமல், 'குற்ற வாளிகளாக இருக்கலாம்!' என்ற சந்தேகத்துடன் சில படங்களை கம்ப்யூட்டரில் வரைந்து காட்டி, அவை சரியில்லாமல், 'மீண்டும் சரியாக வரைந்து தரச் சொல் கிறோம்!' என்று வாபஸ் வாங்கி யுள்ளது ஜெய்ப்பூர் போலீஸ்! தீவிரவாதிகள் அனுப்பிய வீடியோ டேப்பில் டிரெயின் ஓடும் சத்தம் கேட்கிறது என்று இப்போது ஜெய்ப்பூரில் ஓடும் ரயில்களுக்குப் பின்னால் ஓடிக்கொண்டு இருக் கிறார்கள் போலீஸார்!


'இந்தியா பாகிஸ்தான் இடையேயான நட்புறவுப் பேச்சு வார்த்தைகளைச் சீர்குலைப்பதற் கென்றே இந்த சதிச் செயலை தீவிரவாத நாச சக்திகள் அரங் கேற்றியுள்ளன!' என்று வழக்கம் போல் நமது பிரதமர் கடிந்து கொண்டுள்ளார். ஒருவேளை பாகிஸ்தானில் இருந்து செயல் படும் 'லஷ்கர்இதொய்பா' தீவிரவாத அமைப்புதான் இந்தக் குண்டு வெடிப்புகளுக்குக் காரணமோ என்று அனைவரும் யோசித்துக்கொண்டு இருக்க, 'ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புகளை நாங்கள் கண்டிக்கிறோம். அப்பாவி மக்களின் உயிரோடு விளையாடுவதால் இவர்களுக்கு என்ன பயன்!' என்று கரிசன மாக(!) கண்டனம் தெரிவித்துள்ளது லஷ்கர்-இ-தொய்பா!


ஜெய்ப்பூரில் 'சைக்கிள் பாம்' வெடித்ததற்குப் பின்பு, உத்தரப் பிரதேசத்தில் வேடிக்கையாக ஒரு சட்டம் போட்டிருக்கிறது மாயாவதி அரசாங்கம். இனி, ஏதேனும் ஒரு அடையாள அட்டை இருந்தால் தான் உத்தரப்பிரதேசத்தில் புது சைக்கிள் வாங்க முடியுமாம்!


பொறுமையின் சிகரமாகப் பொதுமக்களும், விசாரணை வேங்கைகளாக போலீசும் இருக்கும் வரையில் இந்தியன் முஜாகிதீன், தமிழன் முஜாகிதீன், அண்ணா சாலை முஜாகிதீன் என வரிசையாகத் தோன்றிக் கொண்டேதான் இருப்பார்கள்!


-- நன்றி விகடன்.

0 comments: