18 May 2008

20 கெட்டப்புகளில் ரஜினி

குசேலன் படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இருபது விதவிதமான கெட்டப்புகளில், அதுவும் ஒரே பாடலில் தோன்றி அசத்தப் போகிறாராம்.
மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில் உருவாகி பெரும் வெற்றி பெற்ற கத பறயும்போல் இப்போது ரஜினி நடிக்க குசேலன் எனும் பெயரில் தமிழிலும், குசேலடு எனும் பெயரில் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் தயாராகி வருகிறது. பி.வாசு இயக்கும் இப்படத்தை தமிழில் கவிதாலயா-செவன் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தெலுங்கில் அஸ்வினி தத்தின் வைஜயந்தி மூவீஸும் செவன் ஆர்ட்ஸும் தயாரிக்கின்றன.இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் சில தினங்களில் ரஜினி தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டுவிடும். போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிந்ததும் ஜூலை 18 அல்லது 25-ம் தேதி படத்தை வெளியிடும் முடிவிலிருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
இந்நிலையில் படம் குறித்து இதுவரை வெளிவராத விசேஷ தகவல்களை வாசகர்களுக்காகத் தருகிறோம்.
இதுவரை வந்த ரஜினி படப் பாடல்களில் இல்லாத அளவுக்கு ரஜினியைப் புகழ்ந்தும் அவரது பெருமைகளைச் சொல்லும் விதத்திலும் குசேலன் படத்தில் பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. குறிப்பாக ரஜினியின் அறிமுகப் பாடலும், தலேர் மெஹந்தி, சாதனா சர்க்கம், சித்ரா பாடும் இரண்டாவது பாடலும் ரஜினி ரசிகர்களின் தேசிய கீதங்களாகிவிடும். அந்த அளவுக்கு சிரத்தை எடுத்து இசையமைத்திருக்கிறாராம் ஜி.வி.பிரகாஷ்குமார்.
வாலியின் வசீகர வரிகளில் முதல் பாடல் இப்படித் தொடங்குகிறது:

சினிமா சினிமா சினிமாதான்
எம்ஜிஆரு
சிவாஜி சாரு
என்டிஆரு
ராஜ்குமாரு இருந்ததிந்த சினிமாதான்…
இப்பாடலுக்கு ஆகாயத்திலிருந்து பறந்து வரும் வெள்ளைக் குதிரைகளில் அமர்ந்து ரஜினி வருவது போல் படமாக்கப்பட்டுள்ளதாம். இதற்காக ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் ஒரு கோடி ரூபாய் செலவில் ஒரு பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டதாம். இன்னொரு முக்கியமான விஷயம், இந்தப் பாடலை ரஜினிக்காகப் பாடியிருப்பவர் சங்கர் மகாதேவன். ரஜினியின் ஆஸ்தான பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இந்தப் படத்தில் ஒரு பாடல் கூட பாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
20 கெட்டப்புகள்:
பாட்ஷா படத்தில் “அழகு… அழகு…” பாடலுக்கு கண்டக்டர், டிராபிக் கான்ஸ்டபிள், நாதஸ்வரக் கலைஞர், ஜேம்ஸ்பாண்ட், அல்ட்ரா மாடர்ன் இளைஞர், ரவுடி, சர்வர் என பல கெட்டப்புகளில் தோன்றி அசத்தியிருப்பார் ரஜினி.
இப்போது குசேலன் படத்தில் ஒரே பாடலில் 20 வித்தியாசமான வேடங்களில் தோன்றுகிறாராம். இந்தியாவிலேயே காஸ்ட்லி பாடகர் எனப்படும் தலேர் மெஹந்தி, சாதனா சர்க்கம் மற்றும் சித்ரா பாடும் இந்தப் பாடல் இப்படித் தொடங்குகிறது:
ஓம் ஸாரிரே ஸாரே ஸாரே…
போக்கிரி ராஜா

பொல்லாதவன் நீதான்…
இந்தப் பாடலை எழுதியிருப்பவரும் வாலிதான். ரஜினியின் புகழ்பெற்ற படங்களின் பெயர்களை மட்டுமே இந்தப் பாடலில் பயன்படுத்தியிருக்கிறாராம் வாலி. இந்தப் பாடலுக்காக 20 கெட்டப்புகளில் மின்னல் மாதிரி தோன்றி ரசிகர்களுக்கு இனிய அதிர்ச்சி தரப்போகிறார் சூப்பர் ஸ்டார்.
இவற்றைத் தவிர, ரஜினியுடன் அனைத்துக் கலைஞர்களும் இணைந்து பாடுவது போன்ற ஒரு பாடலும் உள்ளதாம். இதனை கைலேஷ்கர், பிரசன்னராவ் பாடியுள்ளனர்.
பசுபதி-மீனா ஜோடிக்கும் ஒரு பாடல் உண்டாம். கடைசி பாடல் நயன்தாராவின் சோலோ பாடல். ரஜினியை நினைத்து அவர் பாடுவது போன்ற இப்பாடலை சாதனா சர்க்கம் பாடியுள்ளாராம்.
தெலுங்குப் பதிப்புக்கும் இதே பாடல்கள் மற்றும் பாடகர்கள்தானாம். இப்போதைக்கு படப்பிடிப்புக்குத் தேவையான வடிவில் பாடல்களைத் தந்துள்ள பிரகாஷ், விரைவிலேயே தனது சவுண்ட் எஞ்ஜினியர் ஸ்ரீதருடன் லண்டனுக்குப் பறக்கிறார். அங்குள்ள மெட்ரோபோலிஸ் ஸ்டுடியோவில் சவுண்ட் மிக்ஸிங் செய்து உலகத் தரத்தில் பாடல்களைத் தரப்போகிறாராம் பிரகாஷ்குமார்.

0 comments: