19 May 2008

திருமணத்திற்கு முன்பு...

ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டுள்ளனர், ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து, ஒத்த கருத்துக்களைக் கொண்டுள்ளனர், இவர்கள் நண்பர்களாகவோ அல்லது காதலர்களாகவோ இருக்கலாம்... ஒருவருக்கொருவர் பிடித்துள்ள காரணத்தினாலேயே இவர்கள் திருமணம் செய்து கொள்ளலாமா?
கூடாது. ஏன் தெரியுமா காதல் வேண்டுமானால் இந்த இருவரை மட்டுமே சம்பந்தப்படுத்தலாம். ஆனால் திருமணம் என்பது இவர்களது குடும்பத்தையும், இரண்டு பேரின் சமுதாயத்தையுமே தொடர்புபடுத்துகிறது.

ஒருவரது பாரம்பரியமும், மற்றவரது பாரம்பரியமும் வெவ்வேறாக இருக்கும் சூழ்நிலையில் எதிர்காலத்தில் பல்வேறு சிக்கல்கள் எழலாம். எனவே அவற்றை காதலர்கள் நன்கு சிந்தித்து திருமண முடிவை எடுக்க வேண்டும்.

காதலிக்கும்போது காதலரிடம் இருக்கும் நல்ல குணங்கள் மட்டுமே நமக்குத் தெரிகிறது. அவரது கோபம், ஆளுமைத் தன்மையைக் கூட நாம் அப்போது ரசித்திருப்போம். ஆனால், திருமணத்திற்குப் பின்னர் தீய குணங்களை மட்டுமே பார்க்கும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. அதனால் தான் பல காதல் திருமணங்கள் விவாகரத்தில் போய் முடிகிறது. காதலர்கள் நன்கு பக்குவப்பட்டு, தங்களது குடும்பத்தினரின் ஒப்புதலுடன் ஒருவருக்கொருவர் நன்கு புரிந்து கொண்டு திருமண முடிவை எடுக்க வேண்டும்.

காதலை எதிர்க்கும் பெற்றோர்கள் பல சமயங்களில் திருமணம் முடிந்ததும் மனம் மாறி தங்களது பிள்ளைகளை ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால் அதுவரை இல்லாத பிரச்சினைகள் அப்போதுதான் விஸ்வரூபம் எடுக்கும் என்பது நமக்குத் தெரியாதல்லவா. ஆம், தங்களது திருமணத்தை ஏற்றுக் கொண்ட பெற்றோர் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு மகனோ, மகளோ தள்ளப்படுகிறார்கள். அதனால் தம்பதிகளுக்குள்ளேக் கூட பல மனக்கசப்புகள் உருவாகின்றன.

எனவே எந்த நேரத்திலும் தான் கைப்பிடித்தவரை எந்த காரணத்திற்காகவும், யாருக்காகவும் விட்டுக் கொடுக்காத மனவலிமையை காதலர்கள் பெற்றிருக்க வேண்டியது அவசியம்.

அப்படியே தம்பதிகளுக்குள் எந்த பிரச்சினை எழுந்தாலும் அவர்கள் அதை தனது பெற்றோர்களிடம் சொல்லிக்கூட குறைபட்டுக் கொள்ள இயலாது. ஏனெனில் 'நீ தானேத் தேடிக் கொண்டதுதானே' என்று அவர்கள் நம்மைத்தான் கைகாட்டுவர்.

காதலிக்கும்போதே அவர்களுக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், காதலித்துவிட்டோம், கண்டிப்பாக அவரைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்காமல் காதலர்களாகவே பிரிந்து விடுவதும் நல்ல முடிவுதான், ஏனெனில் திருமணத்திற்குப் பின் மன வருத்தம் வந்து நீதிமன்றத்தின் வாயிலில் கணவன் - மனைவியாக பிரியும் நிலைக்குத் தள்ளப்பட வேண்டியதில்லை.

அதனால் காதலிக்கும்போது நல்ல காதலர்களாக இருப்பவர்கள் ஊரே மெச்சும் தம்பதிகளாகவும் இருக்க வேண்டும் என்றால் திருமணத்திற்கு முன்பு குடும்பத்தாருடன் அமர்ந்து பேசி, சிந்தித்து முடிவெடுங்கள். இல்லையேல் பாழாவது வேறு எதுவுமல்ல... உங்கள் வாழ்க்கை.
இதுபற்றி ஒரு நகைச்சுவையும் உண்டு,

அதாவது, திருமணத்திற்குப் பின் காதலன் மாறி விடுவான் என்ற நம்பிக்கையில் இருந்தாள் காதலி.

இப்போது போல் எப்போதும் தனது காதலி இருப்பாள் என்று நம்பினான் காதலன்.

இது இரண்டுமே நடக்கவில்லை என்பதுதான் உ‌ண்மை.

1 comments:

  • Unknown says:
    16 April 2011 at 5:41 pm

    அருமயான வார்த்தைகள்
    அன்புடன்
    வபழனி