26 May 2008

மதுரை...

சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த ஊர் மதுரை. சுமார் 2500 ஆண்டுகள் கலாச்சார பாரம்பரியம் கொண்டது. பாண்டிய மன்னர்களின் பேர் சொல்லும் தலைநகரமாக விளங்கியது. 550 ஆண்டுகளுக்கும் மேலாக கலாச்சாரம் மற்றும் வர்த்தக மையமாக திகழும் ஒப்பற்ற இடம். வற்றாத நதியாக விளங்கும் வைகையின் கரையில் அமைந்துள்ள மதுரைக்கு வையகத்துள் என்றுமே சிறப்பிடம்தான். தூங்கா நகரம் என்ற சிறப்புப்பெயரும் மதுரைக்கு உண்டு.



மதுரையில் பார்க்கத்தகுந்த சிறப்புமிக்க இடங்கள்



மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில்
மதுரையின் முக்கிய அடையாளமாகத் திகழ்வது மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில். திராவிடர்களின் கட்டிட கலைக்கு ஒரு மாபெரும் சான்று. இக்கோவிலை முதலில் அமைத்தது குலசேகர பாண்டியமன்னன் ஆவான். அக்காலத்தில் கதம்பவனம் என்ற பெயரில் காட்டுப்பகுதியாக மதுரை இருந்ததாம். அப்போது ஒரு கதம்பமரத்தின் அடியில் சுயம்புலிங்கத்தை வைத்து இந்திரன் வழிபடுவதைக்கண்ட விவசாயி தனஞ்செயன் என்பவர், இதை குலசேகர பாண்டியமன்னனின் காதில் போட, அதிசயப்பட்டுப்போன மன்னன் உடனடியாக இந்திரன் வழிபட்டதாக சொல்லப்பட்ட பகுதியில் காடுகளை அகற்றி கோவில் அமைத்தான், அதைத்தொடர்ந்து உருவானதே மதுரை நகரம் என்றும் ஒரு வரலாறு சொல்லப்படுகிறது.



மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலை அமைத்தது குலசேகர பாண்டிய மன்னன் என்றாலும் அதை மேலும் அழகுப்படுத்தி தற்போதைய வடிவத்துக்கு காரணமாகவர்கள் என்ற பெருமைக்குரியவர்கள் நாயக்க மன்னர்கள் ஆவர். சுமார் ஆறு ஹெக்டேர் பரப்பளவில் கோவில் வளாகம் அமைந்துள்ளது.12 கோபுரங்கள் அழகுற காட்சி அளிக்கின்றன. இதில் தென்பகுதியில் உள்ள பிரதான பிரம்மாண்ட கோபுரத்தில் மட்டும் 1500 சிற்பங்கள் கலை வேலைப்பாடுகளுடன் கவர்ந்திழுக்கின்றன கோவிலில் ஆயிரம் கால் மண்டபம் அக்கால கட்டிட கலைக்கு அசைக்கமுடியாத சான்றாக விளங்குகிறது. இதில் தூண்களின் எண்ணிக்கை மட்டும் 985 ஆகும். ஒரு முறை மீனாட்சி கோவிலுக்குள் வலம் வந்து விட்டாலே போதும். கண்முன் பார்க்கும் ஆதாரங்கள், நம்மை குலசேகர பாண்டியனின் காலத்திற்கே கொண்டு சென்று விடும். அழகர் கோவில்
மதுரையில் இருந்து சுமார் 21கி.மீ தூரத்தில் உள்ள விஷ்ணு கோவில்தான் அழகர் கோவில். இங்குள்ள அழகான சிற்பங்கள் மேலும் மேலும் பார்க்க தூண்டும்.



பழமுதிர்ச்சோலை
அழகர்கோவிலில் இருந்து சுமார் 2கி,மீ தூரத்தில் உள்ள குன்றுதான் பழமுதிர்ச்சோலை. இங்குள்ள முருகன் கோவில் பிரசித்தம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இதுவும் ஒன்று.



திருமலைநாயக்கர் மகால்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது திருமலை நாயக்கர் மகால். 1636ம் ஆண்டில் மதுரையை ஆட்சி செய்ய திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்டது. அக்காலத்தில் இங்கு இசை, நடன நிகழ்ச்சிகள் தினமும் நடத்தப்பட்டு வந்துள்ளன. இம்மண்டபத்தின் பிரம்மாண்டம் நம்மை வியக்க வைக்கிறது. மண்டபத்தின் உள்ளே மேற்கூரையில் செய்யப்பட்டுள்ள மரவேலைப்பாடுகளும், இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள தூண்களும் கற்பனைக்கும் எட்டாத கலைக்கவிதைகள். ஒவ்வொரு தூணும் 20 மீட்டர் உயரமும், 4மீட்டர் சுற்றளவும் கொண்டது. திருமலை நாயக்கர் கட்டிய இம்மகாலின் பழைய வடிவம் இப்போது இருப்பதை விட நான்கு மடங்கு பிரம்மாண்டமானது என்பதும் கூடுதலான ஒரு ஆச்சரியத்தகவல்.



திருப்பரங்குன்றம்
மதுரையில் இருந்து சுமார் எட்டு கி.மீ தூரத்தில் உள்ள திருப்பரங்குன்றம் முருக பக்தர்களுக்கு மிகவும் பிடித்தமான இடம். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இதுவும் ஒன்று என்பதால் எப்போதும் இங்கு முருகனுக்கு அரோகரா சரணகோஷம்தான்.



இவற்றுடன் கூடல் அழகர் கோவில், கோச்சடை அய்யனார் கோவில், ஷ்ரீஅரவிந்தர் அன்னை தியான மண்டபம், திருமோகுர் கோவில், வண்டியூர் மாரியம்மன் கோவில், ராமகிருஷ்ண மடம் என பார்க்கத்தகுந்த இடங்கள் நிறைய உள்ளன. அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவும், பெண்கள் பெருமளவில் பங்கேற்கும் முளைப்பாரி விழாவும் மதுரையில் பிரசித்தம்.



உணவு, தங்குமிடம், போக்குவரத்து
தமிழக பாரம்பரிய உணவு வகைகளை மதுரையில் ஒரு பிடிபிடிக்கலாம். மல்லிப்பூ இட்லி (ரொம்பவே மிருதுவானது), சாம்பார், பலவகைச்சட்னி மதுரையின் தனி ருசி. தங்குமிடங்களை பொறுத்த வரை அனைத்து பிரிவினருக்கும் ஏற்ற ஹோட்டல்கள் உள்ளன. விமானநிலையம், ரயில் நிலையம் உள்ளதால் எந்தப்பகுதியில் இருந்தும் மதுரைக்கு வந்து விடலாம். அழகான சாலை வசதியும் உண்டு. சென்னையில் இருந்து சுமார் 400 கி.மீ தூரத்தில் உள்ளது.



யப்பா....இப்பவே கண்ணைக்கட்டுதே...ங்கிறீங்களா. போடுங்க மதுரைக்கு ஒரு விசிட்டை.

0 comments: