நாள் ஒன்றுக்கு பத்து சிகரெட் பிடிப்பவர்கள் புற்றுநோய் தாக்கம் ஏற்பட்டுள்ளதா என்று சோதனை செய்து கொள்வது நல்லது என்றும், மேலும் தொடர்ந்து நாளொன்றுக்கு 10 சிகரெட் புகைப்பவர்களின் தாம்பத்திய உறவு சிக்கலாகும் என்றும் அமெரிக்காவில் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.சென்னையில் உள்ள ஆகாஷ் கரு வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் வரும் 16, 17 தேதிகளில் சென்னையில் மூன்றாவது பன்னாட்டு பாலியல் கருத்தரங்கை நடத்துகிறது. இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பின் போது பேசிய இத்துறை மருத்துவர், தொடர்ந்து புகைப் பிடிப்பவர்களுக்கு தாம்பத்திய உறவு கொள்ளும் போது செயல்படாத் தன்மை உள்ளிட்ட பாலியல் குறைபாடுகள் அதிக அளவில் ஏற்படும் என்று தெரிவித்து உள்ளார். அமெரிக்காவில் இதுதொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடத்தப்பட்ட ஆய்வில், நாள் ஒன்றுக்கு 10 சிகரெட் புகைப்பவர்களுக்கு தாம்பத்திய வாழ்க்கையில் சிக்கல் உருவாகும் என்பதை கண்டறிந்துள்ளனர். இவர்களுக்கு தாம்பத்திய உறவின் போது ஏற்படும் விறைப்புத்தன்மையில் சிக்கல் எழும் என்றும் அந்த ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. இதற்கு காரணம் புகைப் பிடிக்கும் போது நமது உடலுக்குள் செல்லும் நிக்கோட்டின் உறிஞ்சும் திசுக்களை பாதிப்புக்கு உள்ளாக்குவதுடன் அதனை சுருங்கச் செய்கின்றன. இது சம்மந்தப்பட்வரின் தாம்பத்திய வாழ்க்கையை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது என்று சிங்கப்பூரைசேர்ந்த மருத்துவ வல்லுநர் அடைக்கண் கூறியுள்ளார். புகைப் பிடிப்பதைப் போன்று மது அருந்துவதும் பாலியல் சிக்கல்களை உருவாக்கவல்லது என்றும் கூறியுள்ளார். நாட்டில் உள்ள 120 கோடி மக்கள் தொகையில் 20 கோடி ஆண்களுக்கு ஆண்மைக் குறைபாடு, போதாமை, பாலியல் செயல்படாத தன்மை உள்ளிட்ட குறைபாடுகளால் அவதிப்பட்டு வருவதாக ஆகாஷ் கரு வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் மருத்துவர் டி. காமராஜ் தெரிவித்து உள்ளார். பல்வேறு உறவு சிக்கலுக்கும், முரண்பாடான நடவடிக்கை ஆகிய பிரச்சனைகளுக்கு மூல காரணமே தாம்பத்திய உறவில் ஏற்படும் அதிருப்திதான் என்று கண்டறியப்பட்டு உள்ளது. இநத சிக்கல்கள் தகவல் தொழில் நுட்பம், அயல் அலுவலக சேவை குறைகளில் பணியாற்றுபவர்களிடையே அதிகம் காணப்படுவதாகவும் மருத்துவர் காமராஜ் கூறியுள்ளார். இதற்கு காரணம் மேற்கத்திய கலாச்சாரத்தின் மீதான மோகம், வாழ்க்கை முறையில் மாற்றம், பரபரப்பான, அழுத்தத்தை ஏற்படுத்துகின்ற வேலை சூழலும்தான் என்றும் காமராஜ் தெரிவித்து உள்ளார்.உலகமயமாதல், கணினிமயமாதல் ஆகியவற்றின் விளைவும், பெருகி வரும் இணையத்தள கலாச்சாரமும் மக்களின் ஒட்டுமொத்த வாழ்க்கை முறையையே மாற்றி அமைத்து உள்ளதோடு, மக்களை அதிக அழுத்தத்தையும், பளுவையும் கொண்ட வாழ்க்கைக்கு அழைத்து செல்வதோடு மக்களின் தாம்பத்திய வாழ்க்கையையும் பாதிக்கின்றது. தற்போதைய வேலை கலாச்சாரம் பாலியல் தொடர்பான மனிதர்களின் எண்ணத்தை மாற்றுவதுடன் தரம் தாழ்ந்து செல்லவும், பாலியல் சீர்குலைவுக்கும் காரணியாக அமைந்து உள்ளது எனவும் மருத்துவர் காமராஜ் தெரிவித்து உள்ளார். துரித உணவுக் கலாச்சாரம், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளை அதிகம் பயன் படுத்துபவர்களுக்கு தொப்பை உள்ளிட்ட உடலின் பல இடங்களில் உருவாகும் ஊளைச் சதையாலும் ஒருவரின் தாம்பத்திய உறவு பாதிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். திருமணமான தம்பதிகளில் 15 விழுக்காட்டினரே கருவளர்ச்சி இன்மை சிக்கலுக்கு உள்ளாவதாகவும், இந்த பிரச்சனைக்கு 35 விழுக்காடு பெண்களும், 30 விழுக்காடு ஆண்களும் காரணிகளாக அமைகின்றனர். சில நேரங்களில் கரு வளர்ச்சியின்மைக்கு ஆணும், பெண்ணும் காரணமாக உள்ளனர். இந்த வகையானவர்கள் 20 விழுக்காடு என்று எடுத்துக் கொண்டால், மீதமுள்ள 15 விழுக்காட்டினர் விவாகரத்து பெற்றதால் என்று மருத்துவர் காமராஜ் கூறியுள்ளார். இந்தப் பிரச்சனைகளில் உள்ள உண்மை நிலைத் தொடர்பாகவும், சமுதாயத்தில் உள்ள தவறான எண்ணத்தையும், நம்பிக்கைகள் தொடர்பாக இத்துறை சார்ந்த வல்லுநர்கள் இரண்டு நாட்கள் விரிவான அளவில் விவாதிக்க உள்ளதாக தெரிவித்து உள்ளார்.இதற்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வல்லுநர்கள் 500 முதல் 600 பேர் கலந்து கொள்கின்றனர் என்று மருத்துவர் காமராஜ் கூறியுள்ளார். மேலும் இந்த கருத்தரங்கில் இந்தியாவில் பாலியல் கல்வி என்பது தொடர்பான விவாதமும் இடம்பெறும் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
0 comments:
Post a Comment