19 May 2008

இதுவல்லவோ தாய்மை!

''உலகத்தில் நீதி செத்து விட்டது.. நல்லவர்கள் இல்லாமலே போய் விட்டார்கள்" என்று விரக்தி கொள்கிறவர்களிடம் இந்த அசாத்தியத் தாயைத்தான் அறிமுகப்படுத்தி வைக்க வேண்டும்.
இழக்கக் கூடாத வயதில் கணவனை இழந்து, வாழ்வதற்கே ஆதாரம் இன்றி, ஆதரவும் இன்றி தவித்தவர் இவர். வீடு வீடாகப் போய், பாத்திரம் தேய்த்து, சமையல் வேலை செய்து கஷ்ட ஜீவனம் நடத்தியவர்.. இன்றும் நடத்தி வருபவர்.
அப்படிப்பட்ட ஒரு பெண்மணி, ஆதரவின்றி குப்பையில் வீசப்பட்ட ஒரு பெண் குழந்தையை எடுத்து வளர்த்து, ஆளாக்கி, எந்தக் குறையும் வைக்காமல் திருமணமும் செய்து கொடுத்திருக்கிறார் என்றால், அது சாதாரண காரியமா?
''இதுக்கே மலைச்சுப் போனீங்கன்னா எப்பிடி? இன்னிக்கு, இத்தனை வயசுக்கு மேல, அதே குப்பைத் தொட்டியிலருந்து இன்னொரு பெண் குழந்தையையும் எடுத்து பழைய உற்சாகத்தோட வளர்த்துக்கிட்டிருக்காங்களே அவங்க..'' என்று அவரை நன்கு அறிந்தவர்கள் மேலும் ஆச்சர்யம் தர, சந்தித்தோம் அந்த தியாகத் தாயை!
''என்னையப் பத்தி எழுதப் போறீங்களா? அதெல்லாம் எதுக்கும்மா? என் பொண்ணுக்கும் சரி, அவ புகுந்த வீட்டுக்கும் சரி.. அவ என் பொண்ணு இல்லைங்கற விஷயமே தெரியாது! இப்போ அதை நான் வெளியில சொன்னா அவ வாழ்க்கை என்னாகுறது?'' என்று முகம் காட்டக்கூட மறுத்துவிட்ட அவரைப் பார்க்கப் பார்க்கப் பெருமை பொங்கியது நமக்கு.
ஆர்வம் பெருக்கெடுத்து மேலும் விசாரித்த நம்மிடம் விரிவாகவே பேசினார் அந்தப் பகுதியில் வெகு காலமாக வசிக்கும் ஜி.கே.முரளிதரன் என்பவர்..
''லட்சுமியம்மாவுக்கு மதுரை பக்கத்துல ஒரு கிராமம்தான் சொந்த ஊர். அந்தக் காலத்துல பஞ்சம் தலைவிரிச்சு ஆடுனப்ப பிழைப்பு தேடித்தான் திருச்சிக்கு வந்திருக்காங்க. அவங்க வீட்டுக்காரர் ரிக்ஷா ஓட்டிக்கிட்டிருந்தார். மனுஷன் அன்பானவர்னாலும் குடிகாரர். அதனாலதான், அவரை மட்டுமே நம்பியில்லாம, லட்சுமியம்மா நாலு வீட்டுல பாத்திரம் தேய்ச்சு வீட்டை நடத்திக்கிட்டு இருந்துச்சு. அவங்க மனசுல இருந்த ஒரே குறை, தனக்கு ஒரு குழந்தை இல்லையேங்கறதுதான்.
அதுக்காக கோயில் கோயிலா அலைஞ்சு பார்த்த லட்சுமியம்மா, அதுக்கப்புறம்தான் ஆஸ்பத்திரிக்குப் போயிருக்காங்க. தீராத குடிப்பழக்கத்தால அவங்க வீட்டுக்காரர் ஒரு குழந்தைக்கு தகப்பனாகுற தகுதியை இழந்துட்டார்ங்கற உண்மை அப்போதான் தெரிஞ்சிருக்கு. விதியை நொந்துக்கிட்டு சமாதானம் ஆகிட்டாங்க அந்தம்மா. ஆனா, அவங்க புருஷன் குடியே கதினு கெடந்ததுல, குடல் வெந்துபோய் ஒரு நாள் இறந்தே போயிட்டார்.
சொந்தம்னு யாரும் இல்லாத ஊருல புருஷனையும் இழந்துட்டு, தன்னந்தனி ஆளா நெருப்பு மாதிரி வாழ்ந்தாங்க அவங்க. அப்போதான் ஒருநாள் கவர்ன்மென்ட் ஆஸ்பத்திரி பக்கத்துல உள்ள குப்பைத் தொட்டியில ஒரு குழந்தை கிடக்குறதைப் பார்த்திருக்காங்க. அதைத் தூக்கினதுமே லட்சுமிக்குள்ள மறைஞ்சிருந்த தாய்மை உணர்வு விழிச்சுக்கிடுச்சு. ஆண்டவனே தனக்குக் கொடுத்த துணைனு நினைச்சு அதை உயிருக்கு உயிரா வளர்த்தாங்க.
இந்த ஏரியாவுலயே ஒரு சில பேரைத் தவிர வேற யாருக்கும் இந்த ரகசியம் தெரியாது. தன் சொந்தப் பொண்ணு மாதிரியே பாசம் காட்டி அந்தக் குழந்தையை கான்வென்ட்ல படிக்க வைச்சாங்க லட்சுமியம்மா. சொந்த ஊர்ல இருந்து எப்பயாவது வர்ற சொந்த பந்தங்கள்லாம் அந்தக் குழந்தையை அநாதைனு சொன்னதால அவங்க எல்லாரையுமே துச்சமா தூக்கியெறிஞ்சிட்டாங்க.
யார் தயவும் இல்லாம அந்தக் குழந்தையை பத்தாவது வரைக்கும் படிக்க வைக்க அவங்க எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பாங்கனு எங்களுக்குத்தான் தெரியும். கூலி வேலை, வீட்டு வேலைனு தான் ராத்திரியும் பகலுமா உழைச்சாலும் அந்தப் பொண்ணை கஷ்டப்பட விடக் கூடாதுனு ரொம்ப வைராக்கியமா இருந்தாங்க லட்சுமியம்மா. தானே நல்ல மாப்-பிள்ளையா பார்த்து கல்யாணமும் பண்ணிக் கொடுத்தாங்க.
'அம்மா.. அம்மா..'னு அந்தப் பொண்ணு கதறி அழுதுக்கிட்டே புருஷன் வீட்டுக்குப் போனப்போ உண்மையெல்லாம் தெரிஞ்ச எங்களுக்கு சிலிர்ப்பா இருந்துச்சு. இப்போ அந்தப் பொண்ணு ரெண்டு குழந்தைகளோட புகுந்த வீட்டுல சந்தோஷமா வாழுது.
அதுக்கப்புறம் திரும்பவும் தனி மனுஷியா கூலி வேலைக்குப் போய் சாப்பிட்டுக்கிட்டிருந்தாங்க லட்சுமியம்மா. அப்பதான், அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி திரும்பவும் அதே குப்பைத் தொட்டியில இன்னொரு பெண் குழந்தை அந்தம்மா கையில கிடைச்சுது. 'இதுவும் எனக்காக ஆண்டவன் அனுப்பி வச்ச துணைதான்'னு சொல்லி, அதையும் இப்போ சீராட்டி வளர்த்துக்கிட்டிருக்காங்க அவங்க.
'நீ எதுக்கும்மா இப்படி பாரத்துக்கு மேல பாரம் சுமக்கறே?'னு நாங்கள்லாம் கேட்டோம். 'பாரம்னு நினைச்சா உடம்பு கூட பாரம்தான். கடமைனு நினைச்சா கஷ்டம் தெரியாது'னு சொல்லி எங்க வாயை அடைச்சுட்டாங்க.
'இந்தப் பொண்ணையும் சொந்தப் பொண்ணுனு சொல்லி வளர்க்கத்தான் அவங்களுக்கு ஆசை. ஆனா, வயசாகிட்டதால அது முடியலை. அநாதைக் குழந்தைனு சொல்லித்தான் வளர்க்கறேன்'னு கவலைப்படுற அவங்க, இந்தப் பொண்ணையும் கான்வென்ட்லதான் படிக்க வைக்கிறாங்க.
இப்படி ஒரு அம்மாவைப் பார்க்குறதே புண்ணியம்னு நாங்கள்லாம் நினைச்சுக்-கிட்டு இருக்க, அவங்க முதல் பொண்ணுக்குத்தான் அவங்க மேல ரொம்ப வருத்தமாம். 'நீ ஏம்மா யாரோ அநாதைக் குழந்தையை எல்லாம் எடுத்து வளக்குறே?'னு சண்டை போடுதாம். இது எப்படி இருக்கு பார்த்தீங்களா!'' என்று அவர் முடிக்க, நம் இமையும் இதயமும் கனத்திருந்தது.

குறிப்பு: இந்தத் தாயின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் பெயரும் சில தகவல்களும் மாற்றப்பட்டுள்ளன. சில அடையாளங்களும் தவிர்க்கப்பட்டுள்ளன.
--
நன்றி விகடன்

0 comments: