18 May 2008

சூடு ஏறுது...

உஸ்.....அப்பாடா என்ன வெயில்...? வெளியில தலைகாட்ட முடியல.....என்ற வார்த்தைகள் ஒலித்துக் கொண்டிருக்கும் காலம் இது. கத்திரி வெயில் என்பதால் வழக்கத்தை விட வெப்பம் அதிகமாக இருக்கிறது. இது கொஞ்ச நாளைக்குத்தான். அப்புறம் சரியாகிவிடும். ஆனால் உலகம் முழுவதும் ஒரு விஷயம் தற்போது அனலடித்துக் கொண்டிருக்கிறது. அது, உலக வெப்பமாதல் எனும் குளோபல் வார்மிங்.
காலம் கெட்டுப் போச்சுங்க. பருவம் மாறி மழை கொட்டுது...திடீர் திடீரென்று புயல் காற்று ஊரை சுருட்டுது.... அங்கங்கே பூமி குலுங்குது. காரணமே தெரியாம கடல் பொங்குகிறது...எல்லாம் கலி காலம் என்று பெரியவர்கள் சொல்லக் கேட்டிருப்பீர்கள். சமீபத்தில் சீனாவை உலுக்கியுள்ள பூகம்பம், மியான்மரை புரட்டிப் போட்ட நர்கீஸ் புயல், கடந்த மாதம் தமிழகத்தில் பெய்த திடீர் மழை.... இதெல்லாம் காலம் மாறிப் போனதுக்கு உதாரணம். இதற்கு ஒருவகையில் நாம்தான் காரணம்.
உலகம் முழுவதும் பெருகிவிட்ட இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கக்கும் கார்பன் மோனாக்சைடு, தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் நைட்ரஸ் ஆக்ஸைடு, கார்பன் டெட்ரா குளோரைடு, குளிர்சாதனங்களிலிருந்து வெளியாகும் பிரியான், குளோரோ புளோரின்...என காற்று மண்டலத்தில் கார்பன் மற்றும் அதன் கூட்டு வாயுக்களின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது.
இதனால் அமில மழை, காற்று மாசு, நோய் பரவல் என பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, சூரியனின் புற ஊதாக் கதிர்களின் நேரடி தாக்கத்தில் இருந்து நம்மைக் காக்க, புவி மட்டத்தில் இருந்து 36 கி.மீ உயரத்தில் இயற்கை அமைத்த கொடையான ஓசோன் படலத்தில் இப்போது சல்லடை போல் ஓட்டைகள்.
மேலும் காற்று மண்டலத்தில் கார்பன் வாயுத் தொகுதிகளின் அளவு 280 பி.பி.எம் (மில்லியனில் ஒரு பங்கு)தான் இருக்க வேண்டும். ஆனால் இன்றைக்கு 380 பி.பி.எம்மைத் தாண்டி விட்டது. இந்த நூற்றாண்டின் இறுதியில் இது 800 ஆகிவிடும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஆனால் 500 பி.பி.எம்மைத் தாண்டினாலே நாம் உயிர் வாழ முடியாது என்பது மற்றுமொரு ஆபத்து.
ஏனெனில் காற்றில் கார்பன் வாயுத் தொகுதிகள் அதிகமாகிவிட்டால், அதில் இருக்கும் கார்பன் மூலக்கூறுகள் அதிகப்படியான வெப்பத்தை உள்வாங்கி, அப்படியே திருப்பி தரும். இதனால் காற்று மண்டலம் வழக்கத்தை விட சூ...டாகிவிடும்.
இதைத் தடுக்க வேண்டும். தொடர்ந்தால் நிலைமை விபரீதம் ஆகிவிடும். எனவே சுற்றுச் சூழல் மாசு படாமல் காக்க வேண்டும். காடுகளை வளர்க்கவும், காக்கவும் வேண்டும் என்று நிபுணர்கள் அலறினர். தனிமனிதர்கள் கண்டுகொள்ளவில்லை என்றாலும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், ஐ.நா அமைப்புகள், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
ஆனாலும் ஓசோனில் ஓட்டைகள் விழுவது நின்றபாடில்லை. இதனால் ஆர்ட்டிக், அன்டார்டிக் பகுதிகளில் உள்ள பனி மலைகள் வேகமாக உருகி வருகின்றன. விளைவு, கடல் மட்டம் அதிகரித்து, நிலப்பரப்பு குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வரும் 2100ம் ஆண்டில் கடல் மட்டம் 5 மீட்டர் உயர்ந்து விடும். இதனால் 5 கோடி இந்தியர்கள் வீடுகளை இழப்பார்கள். இந்தியாவில் கடற்கரை ஓரம் உள்ள பல நகரங்கள் கடலுக்குள் சென்று விடும். குறிப்பாக சென்னை எண்ணூர் கூட கொஞ்சம் கொஞ்சமாக கடலுக்குள் சென்று கொண்டிருக்கிறது என்கிறார்கள் நிபுணர்கள்.
மறு புறம் உலக வெப்பமாதலால் கடல் நீர் ஆவியாகி செல்வதால், கடலில் வெற்றிடம் ஏற்பட்டு, அவ்வப்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயல் உருவாகின்றன. மேலும் பருவம் தவறிய, குறைவான மழையளவு, முறையற்ற தட்ப வெப்பம், சுனாமி, பூகம்பம் என்ற தொடர் விளைவுகளும் ஏற்படும் என்கின்றனர் சூழலியல் நிபுணர்கள்.
இந்த நிலையை மாற்ற வேண்டிய கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. நம்மையும் எதிர்கால சந்ததியினரையும் காப்பது நமது கடமை. இந்த பேராபத்தில் இருந்து மரங்கள் நம்மைக் காக்க முடியும். அவை நச்சு வாயுக்களை சுவாசித்து, நமக்காக பிராண வாயுவை வெளியிடுகின்றன. எனவே இருக்கும் காடுகளைக் அழிக்காமல், காக்க வேண்டும். காடுகள் இருந்தால் மண்வளம், மூலிகைகள், வன விலங்குகள், செழுமை, கூடுதல் மழையளவு, இயற்கைப் பாதுகாப்பு என பல்வேறு நன்மைகள் உள்ளன. பெல் போன்ற சில நிறுவனங்கள் சுற்றுச் சூழலைக் காக்கும் வகையில் தொழிற்சாலை வளாகத்தை சுற்றிலும் மரங்களை வளர்த்துள்ளன.
அது போல் ஒவ்வொரு தொழிற்சாலைகளும் ஏராளமான மரங்களை வளர்க்க வேண்டும். நம்மால் ஏற்பட்ட உலக வெப்பத்தை குறைக்க ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும். அதற்கு, இப்போதே மரம் வளர்க்க தொடங்குங்கள். கணியன் பூங்குன்றனாரின் கூற்றுப்படி தீதும் நன்றும் பிறர் தர வருவதில்லை.

0 comments: