18 May 2008

இதிலும் விஷம்

குளிர் பானங்களில் விஷத்தன்மை கொண்ட கெமிக்கல்கள் கலந்திருக்கின்றன’ என்ற பிரச்னை நாட்டையே உலுக்கி எடுத்தது. இது ஏதோ மேல்தட்டு மக்களின் பிரச்னை என்று நடுத்தர வர்க்கத்தினரும் சாமானியர்களும் இருந்துவிட்டார்கள்.
ஆனால் இன்று, எல்லா தரப்பு மக்களின் அன்றாட வாழ்க்கைக்கும் ஜீவாதாரமாய், உயிர் மூச்சாய் விளங்கும் பாலில் பெரிய அளவில் கலப்படம் நடந்து வருவதைக் கண்டு மக்கள் கொதித்துப் போயிருக்கிறார்கள்.
தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக பசுவின் பாலைப் பருகிதான் லட்சக்கணக்கான குழந்தைகள் வளர்கின்றனர். உடலுக்கு ஆரோக்கியம் என்று நம்பித்தான் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்தப் பாலை அருந்தி வருகிறார்கள். கோடிக்கணக்கான மக்களின் உயிர் நாடியான பாலில் கலப்படம் செய்கிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல்கள் நாடு முழுவதும் ஒருவித பதற்றத்தை உண்டாக்கியிருக்கிறது. இதுவரை பாலில் தண்ணீரைக் கலந்து காசு பார்த்த கும்பல், இப்போது ஒரு வித பவுடரைக் கலந்து அதிகளவு காசு பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.
ஒரு வித மாவுப் பொருள்தான் அந்தக் கலப்படப பொருள். யாரும் எளிதில் கண்டு பிடித்துவிட முடியாத அளவிற்கு படு சீக்ரெட்டாக அந்த பவுடரை விற்கிறார்கள். கிலோ 800 ரூபாய்.
(அந்த பவுடர் பெயரையோ, அதை எதில் தயாரிக்கிறார்கள் என்ற ரகசியத்தையோ அது எங்கிருந்து விற்பனைக்கு வருகிறது என்பதையோ சொல்ல மறுக்கிறார்கள்.)
இப்படி வாங்கிய பவுடரை எப்படி பாலாக மாற்றி பால் கலப்படம் செய்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ள, பால் பண்ணை வைத்திருக்கும் ஒரு நபரோடு தேனி மாவட்டம், கம்பம் பகுதிகளில் நாம் விசிட் அடித்தோம்.
‘‘ஒரு டீஸ்பூன் அளவு பவுடருடன் கொஞ்சம் தண்ணீர் விட்டு அதை மிக்ஸ்சியில் போட்டு பத்து நிமிடம் அரைக்கிறார்கள். அப்போது அது தயிர் போன்ற நுரை கலந்த வெள்ளை கலரில் வருகிறது. அதை அப்படியே 25 லிட்டர் தண்ணீரில் கலந்து அதனுடன் 200 கிராம் சீனியை போட்டு நன்கு ஆற்றுகிறார்கள். தண்ணீரோடு கலந்து பிசுபிசுப்புத் தன்மையோடு பாலாக மாறியது பவுடர் மிக்ஸிங். அந்த 25 லிட்டர் கலவைப் பாலில் 25 லிட்டர் ஒரிஜினல் கறவைப் பாலை கொண்டு வந்து ஊற்றுகிறார்கள். தற்போது கலவை பாதி, கறவை பாதி என 50 லிட்டர் பால் சில்லறை விற்பனைக்கும், பண்ணைக்கும் கேன்களில் நிரப்பப்பட்டது. இந்தக் கலப்படப் பால்தான் ஊர் ஊராக சைக்கிளில் வைத்து விற்பவர்களுக்கும், டீக்கடைகளுக்கும், பெரிய பெரிய ஹோட்டல்களுக்கும் கூட விற்பனை செய்யப்படுகிறது.
கலவைப் பாலையும், ஒரிஜினல் பாலையும் தனித்தனியே வைத்து இரண்டுக்கும் என்ன வித்தியாசம் உள்ளது என பால்மானியை வைத்துப் பார்த்தால் எந்த வித்தியாசமும் தெரியவில்லை. கூடவே எஸ்.எம்.எஃப் (கொழுப்புச் சத்து, இதர சத்து) அளவு எவ்வளவு என பார்த்ததில் ஒரிஜினல் பாலை விட கலவைப் பாலில் கொழுப்புச் சத்து அதிகமாக காட்டியது.’’
தனியார் மற்றும் ஆவின் போன்ற குளிரூட்டப்பட்டு ஏற்றுமதி செய்யும் பால் கம்பெனிகளில் பாலின் தரத்தையும் விலையையும் நிர்ணயிப்பது இந்த அளவை வைத்துதான். அதனால் கலப்படப் பாலைக் கண்டுபிடிப்பது கடினம். இந்த கலப்படப் பாலில் புளியோ, வியர்வையோ பட்டால் கூட பால் கெட்டுப்போகாது என்கிறார்கள்.
இந்த கலப்படம் பற்றி ஓய்வு பெற்ற ஆவின் அலுவலர்களிடம் கேட்டோம். ‘‘பாலில் கலப்படம் நடப்பது உண்மைதான். ஆங்காங்கே மனசாட்சிக்கு விரோதமா பணத்திற்கு ஆசைப்பட்டு இது போன்ற கலப்படப் பாலை விற்கிறார்கள். பெரும் பண்ணைகளில் கொழுப்புச் சத்து, இதரசத்து அளவுதான் பார்ப்பார்கள். பாலில் தண்ணீர் கலந்தால் கொழுப்புச் சத்து அளவு குறையும். அதனால் காசு கொள் முதல் அளவும் குறையும். ஆனால் கலப்படப் பாலில் கலக்கும் பவுடரில் என்ன கெமிக்கல் கலந்த மோசமான கொழுப்புச் சத்தைக் கலக்கிறார்களோ தெரியலை. கொழுப்புச் சத்து அளவு கூடுதலாக காட்டும். அதோடு இதரசத்துக்களை காட்ட அந்த அளவிற்கு சீனியை கலந்துவிடுகிறார்கள். இது பணத்திற்காக பாலில் விஷத்தைக் கலப்பது போன்றதுதான். தீவன பற்றாக்குறை மற்றும் மாடு வளர்ப்பு குறைந்த போதும் இன்றையத் தேவைக்கு ஏற்ற அளவு பால் கிடைக்கிறது என்றால் பெருகிவிட்ட இதுபோன்ற பால் கலப்படங்களால் தான்’’ என கொட்டித் தீர்த்தனர்.
அன்றாடம் பால், டீ, காபி என விற்பனைக்கும், உபயோகத்திற்கும், பயன்பட்டுத் தீர்ந்து விடுவதால் அது கலப்படக்காரர்களுக்கு சாதகமாகி விடுகிறது.
தாய்ப்பால் இல்லாததால் புட்டிப்பால் அருந்தும் குழந்தைக்கும், அன்றாடம் பால், டீ, காபி என குடித்து பிழைப்பு நடத்தும் அனைவருக்கும் இது போன்ற கலப்படப் பாலைக் குடித்தால் ‘ஸ்லோ பாய்ஸ்சனாக’ உடல் நலம் பாதிக்கும் என்ற அச்சத்தால் மக்கள் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.
பால் விலை உயர்ந்த போதும் தங்கள் வாழ்வோடு கலந்துவிட்ட ஜீவாதாரமான பாலை அன்றாடம் வாங்கி உபயோகிக்கும் மக்களை இது போன்ற கலப்படப் பால்களால் ஏமாற்றுவது நியாயமா? தண்ணீரில் பவுடரைக் கலந்து பாலை நஞ்சாக்கி பணம் சம்பாதிக்கும் கொடூர மனம் கொண்டவர்களுக்கு என்னதான் தண்டனை?

0 comments: