பிளாக்குகள் என்று அழைக்கப்படும் வலைப்பதிவுத் தளங்கள் என்றாலே சிலருக்கு எரிச்சல் ஏற்படலாம். வெட்டியாகபொழுது போக்கும் நபர்களே வலைப்பதிவுகளில் எழுதுவார்கள் என்று கருதும் போக்கும் உள்ளது. மாறாக வலைப்பதிவுத் தளங்களில் ஒரு விவகாரம் குறித்த கருத்துப் பகிர்வுகள் ஆரோக்கியமானதே என்று கருதும் போக்கும் உள்ளது. இவையெல்லாம் நாம் அறிந்ததே.
பிளாக்குகளை பொறுத்தவரை நாம் அறியாத பகுதி ஒன்றும் உள்ளது. அதாவது தங்களது வலைப்பதிவு தளங்கள் மூலம் வேலைவாய்ப்பு பெறுபவர்கள் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது.
நாம் சாதரணமாக உருவாக்கும் பயோ-டேட்டா வெறும் ஒரு எழுத்து வடிவமாகவே உள்ளது. அதன் மூலம் உங்கள் ஆளுமைகள், எண்ணங்கள், சிந்தனைகள் ஆகியவற்றை ஒருவர் அறிய முடியாது.
ஆனால் வலைப்பதிவில் உங்கள் குரல் உலகம் முழுவதும் கேட்கிறது. உங்களின் அரிய குணங்கள், ஒரு பிரச்சினையை அணுகும் விதம், உங்கள் பணித்திறன் ஆகியவை உங்கள் வலைப்பதிவு மூலம் தெரிய வரும்போது, நல்ல வேலைக்கான சந்தர்ப்பங்களையும் அது உருவாக்கி விடுகிறது.
வலைப்பதிவுதான் தற்போது புது வடிவ பயோ-டேட்டா என்று கூறுகின்றனர் சில மேலை நாட்டு வலைப்பதிவாளர்கள்.
நிறுவனங்களும், வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனங்களும் தற்போது தேடல் எந்திரம் மூலம் பிளாக்குகளுக்கு வலை விரிக்கிறது. வலைப்பதிவுகள் ஒருவர் குணாதிசயத்தின் சாராம்சத்தை வெளிப்படுத்துகிறது.
மேலும் ஒருவரது சிந்தனைகள் வெளிப்படும் வலைத்தளத்திலிருந்து ஒரு நிறுவனத்தின் பணிப் பண்பாட்டிற்கு அந்த நபர் சிறந்தவரா இல்லையா என்று கண்டு கொள்ளலாம் என்று ஒரு மேலை நாட்டு வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது.
அந்த நிறுவனம் சமீபமாக இரண்டு நபர்களை அவர்களது வலைப்பதிவுத் தளங்களை பார்த்தே பணித் தேர்வு செய்துள்ளது.
வேலை வாய்ப்பின் சிறந்த கருவியாக மாறும் வலைப்பதிவுத் தளங்கள் உங்களுக்கு பொருத்தமான நிறுவனத்தையும் அடையாளம் காட்டக்கூடியது. அதனால் வலைப்பதிவை நன்றாக பராமரிப்பது அவசியம். அனாவசியமான சச்சரவுகளையும் அக்கப்போர் பேச்சுக்களையும் பதிவு செய்வதை தவிர்த்து. ஆரோக்கியமான விஷயங்களை எழுதினால் வேலை வாய்ப்புக்கான ஒரு வாசலாகவே அது அமையும்.
தற்போது வேலைக்காகவே பிளாக் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பழக்கம் ஆங்காங்கே பெருகத் தொடங்கியுள்ளன.
yes.. you are right. very useful article