11 June 2008

நீங்கள் வெற்றிகரமான மனிதரா???

ஒரு மிகப் பெரிய தொழிலதிபர். நிற்கக்கூட நேரம் இல்லாதவர். பறந்துகொண்டே இருப்பவர். பல்வேறு இடங்களில் தொழில்! பல தரப்பட்ட தொழில் சந்திப்புகள். வெற்றிகளைத் தவிர வேறு ஏதும் அறியாதவர். அவர் கை வைத்தவை எல்லாம் பொன்னாகும் காலகட்டம்.


இவரது கடல் போன்ற பங்களாவில் நுழைவாயிலை ஒட்டிய அறையில் வயதான அம்மா. உண்ணும் உணவைவிட மருந்து மாத்திரைகளின் அளவு அதிகம் என்கிற நிலையில் உடம்பு.


காலையில், ``அம்மா! போயிட்டு வர்றேன்!'' என்பதோடு சரி. இரவு திரும்ப வெகுநேரமாகிவிடும். அம்மாவுக்கு வாயிற்கதவு திறக்கப்படும் சத்தம்; கார் கதவு சாத்தப்படும் சத்தம் இந்த இரண்டையும் வைத்து மகன் எப்போது வந்தான் என்று அந்த இருட்டிலும் டார்ச்லைட் அடித்து கடிகாரத்தைப் பார்த்துக் கொள்வார்.


இந்தத் தொழிலதிபரின் மகன் மற்றும் மகளின் நிலை இன்னும் சுமார். ``ராத்திரிக்கு ராத்திரி ஒருத்தர் நம்ம வீட்டுக்கு வந்து தூங்கிட்டுப் போறாரே, அவரு யாரும்மா?'' என்கிற பிரபல நகைச்சுவைக்கு அடுத்தபடியான நிலை.


இவரை ஒரு வெற்றிகரமான தொழிலதிபராக ஊர் வியக்கலாம். ஆனால் ஒரு வெற்றிகரமான மனிதராக எண்ணி வியக்க முடியவில்லை.


குடும்பம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அடித்தளம். இது சரியாக அமையாவிட்டால், ஆகாயக்கோட்டைகளைக் கட்டி என்ன பயன்?


நடுத்தரக் குடும்பங்களில்கூட என்ன வாழ்கிறதாம்? உலக அளவிலான கிளைகள் கொண்ட வங்கி ஒன்று நம் நாட்டு வங்கி ஒன்றை சுவீகரித்துக் கொண்டது. இதில் பணிபுரியும் நம்மவர் ஒருவர், காலையில் ஏழரைக்குப் புறப்பட்டுப் போனால் இரவு பத்தரைக்கு வந்து உயிரற்ற உடலாய்ப் பொத்தென்று, பாண்ட்டைக் கூடக் கழற்றாமல் படுக்கையில் விழுவார். பசியைவிட அசதி அதிகம். பொண்டாட்டி பிள்ளைகளைக் கவனிக்க ஏது நேரம்?


இத்தகையவர்களுக்கு ஒரு யோசனை. இவர்களுக்கு நாம் Quantity time (அதிக நேரம்) ஒதுக்கமுடியாது. ஆனால் (தரமான நேரம்) Quality time கொடுக்கமுடியும்.


நேரமற்ற அந்தத் தொழிலதிபர்கூட ஒரு நிமிடமேனும் ஒதுக்கி, ``என்னம்மா! சாப்பிட்டியா? உடம்புக்கு என்ன பண்ணுது? மருமகள் நல்லா கவனிச்சிக்கிட்டாளா? உனக்கு வேறு என்ன தேவை?'' என்று வாஞ்சையான மொழிகளில் அன்பான தொனியில் நான்கு கேள்விகளை மாற்றிப் போட்டும் புரட்டிப்போட்டும் தினமும் கேட்டால் போதும். அம்மாவுக்குக் கொள்ளாது.


``நேரமே இல்லாத புள்ளை. ஆனாலும் பாசத்துக்குக் குறைவில்லை'' என்று, வருகிற போகிறவர்களிடமெல்லாம் மகன் புராணம் பாடுவார்.


``எவ்வளவு வேலையிருந்தாலும் என்கிட்ட நின்னு நாலு வார்த்தை பேசாமப் போகமாட்டான்'' என்றும் சேர்த்துக் கொள்ளத் தவறமாட்டார்.


மலேசியத் தமிழர்கள் பலரிடம் ஒரு நல்ல பழக்கம். பிள்ளைகள் காலையில் பள்ளி, கல்லூரிக்குக் கிளம்புவதற்கு எனச் சாப்பிட அமர்வார்கள் அல்லவா? அப்போது அப்பாவும் பிள்ளைகளுடன் உட்கார்ந்து சாப்பிடுவார். அதெப்படி இவ்வளவு சீக்கிரம் சாப்பிடுவது என்று கேள்வி கேட்கமாட்டார். பிள்ளைகளிடம் பேசக் கிடைக்கிற நேரம், பிள்ளைகளுடன் செலவழிக்கிற நேரம் இதுமட்டும்தான்.


அம்மா என்றால் காலைத்தொட்டு ஆசீர்வாதம். பிள்ளை என்றால் நெற்றியின் உச்சியில் ஒரு முத்தம். இதற்கு ஆகும் ஒரு நிமிடத்தில் டன் டன்னாய் அன்பை வெளிப்படுத்திவிட முடியுமே!


ஒரு டை கட்டுகிற நேரம்; அதை அவிழ்க்கிற நேரம்; சாக்ஸ், ஷூ மாட்டும்; கழற்றும் நேரம் இருக்கிறதே, இதற்கு ஆகும் ஒரு நிமிடத்தில்கூட குடும்ப உறுப்பினர்களிடம் நம் அக்கறையையும் அன்பையும் வெளிப்படுத்த முடியும்!


இதற்குக்கூட நேரமில்லை என்பவர்களை எப்படி வெற்றிகரமான மனிதர்களாக ஏற்கமுடியும்?.


நன்றி, குமுதம்.

1 comments:

  • Unknown says:
    16 April 2011 at 10:36 am

    மிகவும் அருமை சில நிகழ்வுகளை தேட முடியாத என் போன்றவருக்கு ஒரு வரப்பிறசாதம்
    அன்புடன்
    வபழனி