16 June 2008

பெற்றோர் படிக்க வேண்டிய பாடம்

விகடன் பதிப்பாளர் திரு.பா.சீனிவாசன், அவர்கள் இந்த வார விகடனில் எழுதியது....

ஊர் மந்தையில் கிராமத்துப் பெரிசுகளும் இளவட்டங்களும் கூடியிருக்க... ''எலேய்! அக்கம்பக்கத்து ஊர் இஸ்கோல்ல எல்லாம் நூத்துக்கு நூறு பசங்க பத்தாங்கிளாஸ் பாஸ் பண்ணிட்டாங்களாம். நம்ம ஊர் சர்க்காரு பள்ளிக்கோடத்துல மட்டும் நூத்துக்கு இருவது பசங்கதான் பாஸாகியிருக்கானுங்க..!'' என்று செய்தித்தாளோடு ஒருவர் உரக்கக் குரல் எழுப்ப... ''ஒளுங்கா பாடம் நடத்தாத நம்மூரு வாத்திங்களைச் சும்மா விடாக் கூடாதுலே!'' என்று இன்னொருத்தர் கொதிக்கிறார்.

பாரதிராஜா படத்துக் கிராமம் போலவே, வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு திபுதிபுவெனக் கிளம்பியவர்கள், அந்தப் பள்ளிக்கூடத்தின் பத்தாம் வகுப்பு ஆசிரியர்களைச் சூழ்ந்துகொண்டு பந்தாடியிருக்கிறார்கள்.

-இப்படியொரு செய்தியைப் படிக்க நேர்ந்தபோது, எனக்குள் எழுந்த முதல் எண்ணம்... 'ஹூம்! காலம்தான் எவ்வளவு மாறிப்போச்சு! பையன் ஃபெயிலானால் அவனைப் போட்டு அடிக்கிற காலம் போய், அவனுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கிற வாத்தியாரை அடிக்கிற அளவுக்கு மக்க ளுக்குதான் எத்தனை விழிப்பு உணர்ச்சி(!) வந்துவிட்டது!'

''தப்பு எங்க மேல இல்லீங்க... ஒழுங்கா படிக்காத பசங்களை முதுகுல நாலு வெச்சாதான் வழிக்கு வருவாங்க. இப்பெல்லாம், சும்மா அவனைப் பார்த்துக் கையை ஓங்கினாலே, போலீஸ் வரைக்குமில்லே போயிடுறாங்க'' என்று 'பாதிக்கப்பட்ட' ஆசிரியர் ஒருத்தர் குமுறியது அடுத்த ஹைலைட்!

தாக்கப்பட்டது பற்றி போலீஸில் வாத்தியார்கள் ஏன் புகார் தரவில்லையாம்? அப்படித் தந்தால், பள்ளிக்கூட லட்சணம் வெளியில் பரவி, கல்வித் துறையும் தன் பங்குக்கு ஏதாவது 'சூடு' வைக்குமோ என்ற எச்சரிக்கை உணர்வுதானாம்!

மாணவர்கள் மீது அக்கறைகொண்டு, அவர்களை அடிக்காதபடி சட்டம் போட்ட அரசு, இனி ஆசிரியர்கள்பேரிலும் அக்கறைகொண்டு அவர்களை யாரும் அடிக்கக் கூடாது என்று அரசாணை போட வேண்டி வருமோ?

'வாத்தியாரையும் போலீஸையும் மதிக்காத சமூகம் உருப்படாது' என்பார்கள் ஊர்ப்பக்கம்.

பெற்றோரும் அக்கறையாகக் கற்க வேண்டிய பாடம் இது!

என்றும் உங்களுக்காக,
பா.சீனிவாசன்,
விகடன் பதிப்பாளர்

1 comments:

  • வடுவூர் குமார் says:
    6 May 2009 at 6:41 pm

    படிக்கவே கஷ்டமாக இருக்கு.ஏற்கனவே சொல்லிக்கொடுக்கும் கல்வியின் தரம் சரியாக இல்லையோ என்ற எண்ணம் இருக்கும் போது இப்படிப்பட்ட மாணவர்களால் தரம் மேலும் சரியுமே தவிர மேலே ஏறாது.