20 June 2008

உங்கள் திருமணத்தை பதிவு செய்திருக்கிறீர்களா?

‘‘அடக் கொடுமையே, அந்தப் பையனும் பொண்ணும் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்டாங்களாமே!’’

ஏதோ, வீட்டுக்குத் தெரியாமல் திருட்டுத்தனமாக கல்யாணம் பண்ணிக் கொள்ளும் ஜோடிகளுக்கான விஷயம் என்கிற இந்த தொனியில்தான் இன்னமும் நம் ஊரில் பதிவுத் திருமணங்கள் பற்றிய அபிப்ராயம் இருக்கிறது.

ஆன்றோரும் சான்றோரும் ஆசீர்வதிக்க, சுற்றமும் நட்பும் சூழ்ந்து நடக்கும் திருமணங்களும்கூட பதிவு செய்யப்பட வேண்டியது அவசியம் என்பது பலருக்கும் தெரிவதில்லை. ‘திருமணங்களை பதிவு செய்வதுதான் பெண்களுக்கு பாதுகாப்பை தரும்!’ என்பது பல்வேறு குடும்ப வழக்குகளில் உணர்த்தப்பட்ட போதும், இங்கே அந்த பிரசாரம் பெரிதாக எடுபடவில்லை. விளைவு, முறையான திருமண ஆதாரம் இல்லாததால், பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில், இதற்கொரு தீர்வாக, ‘திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்துகொள்ள வேண்டும்’ என்று சமீபத்தில் ஆணை ஒன்றை வெளியிட்டு இருக்கிறது உச்ச நீதிமன்றம்.

சீமா என்ற பெண்மணி தொடர்ந்த வழக்கில், ‘‘திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்யும் உத்தரவை மூன்று மாதங்களுக்குள் செயல்படுத்துவதற்கு விதிமுறைகளில் தேவையான திருத்தம் செய்ய வேண்டும்’’ என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது, உச்ச நீதிமன்றம்!

திருமணங்களை பதிவு செய்துகொள்ள வேண்டியது எந்த வகையில் அவசியம் என்பது பற்றி ஒரு அலசல்...

‘‘எந்த ஒரு உறவுமே சுமூகமாக இருக்கும்வரை எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், அதில் சிக்கல் முளைக்கும்போது உரிய ஆதாரங்கள் இருந்தால்தானே நிவாரணம் கிடைக்கும்!’’ என்று ஆரம்பித்தார் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சுமதி.

‘‘என்னதான் ஊரார் முன்பு, அம்மி மிதித்து, அருந்ததி பார்த்து கல்யாணம் செய்துகொண்டாலும், கணவன் ஏமாற்றிவிட்டுப் போகிறான் என்கிறபோது, சட்டத்தின் முன்பு அவனை நிறுத்த இந்த சாட்சிகள் போதாது. அவர்களின் திருமணம் முறைப்படி பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டியது அவசியம். நம் நாட்டை பொறுத்தவரை, ‘கல்யாணம் முடிந்ததும் அதைப் பதிவு செய்யவேண்டும் என்ற கட்டாயம் இல்லை’ என்பதாலேயே பெண்கள் அதிகளவில் ஏமாற்றப்படுகிறார்கள்!

கணவரால் ஏமாற்றப்படும் பெண்கள் கோர்ட் படியேறும் சமயங்களில், ‘இவர்தான் என் கணவர். இதோ, பாருங்க, இவர் எனக்கு கட்டின தாலி’ என்று எடுத்துக் காட்டுவார்கள். ஆனால், அவர்தான் மனைவி என்பதை நிரூபிக்க அந்த தாலி போதாது. ‘இவ என் மனைவியே இல்லை’ என்று அடித்துச் சொல்லிவிட்டு, அவன் தப்பித்து விடுவான். திருமண அழைப்பிதழ், திருமணப் புகைப்படம் அல்லது அவர்களின் குழந்தையின் பர்த் சர்டிபிகேட்... இவற்றில் ஏதாவது ஒன்றை ஆதாரமாகக் காட்டினால்தான் அந்தப் பெண்ணுக்கு நீதி கிடைக்கும்.

நம்ம ஊரில் கோயில்களில் திருமணம் வைத்துக் கொள்வது வழக்கம். பெரும்பாலான கோயில்களில் நன்கொடை சீட்டு ஒன்றைத்தான் ரசீது போல தருவார்கள். ஒருபோதும் அது திருமணத்துக்கான ஆதாரமாக ஆகாது. முறைப்படி பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட வேண்டும். அதேபோல், கோயிலில் அம்மன் சிலைக்கு முன்னே நின்றபடி குங்குமம் வைப்பது, சும்மா ஒரு மஞ்சக் கயிறை கட்டி விடுவது... இவை எதுவுமே சட்டத்தின் முன்பு எடுபடாது.

நாளை உங்கள் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்வதென்றாலும், கல்யாண மண்டபத்துக்கு வாடகை கொடுக்கும்போது, மணப்பெண் மற்றும் மணமகன் பெயரில், கல்யாணத் தேதியைக் குறிப்பிட்டு தெளிவான ரசீதாக மண்டப உரிமையாளரிடமிருந்து வாங்கி கொள்ளுங்கள். கல்யாண பத்திரிக்கை முதல் அனைத்தை யும் பத்திரமாக வைத்திருங்கள்!’’ என்று சொன்ன சுமதி,

‘‘நம் வாழ்க்கை நன்றாகவே இருக்கும் என்றாலும், பாதுகாப்போடு இருப்பதில் தவறில்லை. பின்னாளில் கோர்ட் படியேறுவோம் என்று எதிர்பார்த்து யாரும் திருமணம் செய்துகொள்வதில்லையே’’ என்று முடித்தார்.


சென்னையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஷீலா ஜெயப்பிரகாஷிடம் பேசியபோது, ‘‘கடந்த 15 ஆண்டு களாகவே திருமணங்களை கட்டாயமாகப் பதிவு செய்யவேண்டும் என்ற பிரசாரம் உள்ளது. ஆனால், ‘கல்வியறிவில் நம் மக்கள் பின்தங்கியுள்ளனர்’ என்ற காரணத்தைக் காட்டி, இதை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டது நம் அரசு. கல்வியறிவில் பின்தங்கிய அதே மக்கள்தானே கையளவு நிலமோ, வீடோ வாங்கினால்கூட, அருகில் இருக்கும் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று, சொத்தை கிரயம் செய்கின்றனர்? எழுதப் படிக்கத் தெரியாவிட்டாலும் கைநாட்டு போட்டாவது சொத்தை பதியமுடியும் என்கிறபோது, திருமணங் களைப் பதிவதும் சுலபம்தானே!’’ என்று சூடாகவே ஆரம்பித்தார்.

‘‘பதிவுத் திருமணங்களின் அவசியம் குறித்த அரசின் பிரசாரமும் விளம்பரங்களும் இன்னும் முடுக்கிவிடப் பட வேண்டும். போலியோ சொட்டு மருந்து பிரசாரம் எப்படி நாட்டின் மூலை முடுக்கு எல்லாம் பரவி, இன்று வெற்றியடைந்துள்ளதோ, அதே வழிமுறையில் இதையும் பரப்பவேண்டும். இப்போதிலிருந்தே தொடங்கினால், இன்னும் ஐந்து ஆண்டுகளில் பலன் கிடைக்கும். அதன் பிறகு, ‘பதிவு செய்யப்படாத திருமணங்கள் செல்லாது’ என்ற நிலைமை வந்தால், திருமணப் பதிவும் கட்டாயமாகிவிடும்’’ என்றவர், திருமணங்களை பதிவு செய்வதில் உள்ள முக்கியமான நன்மைகளை பட்டியலிட்டார்...

‘‘திருமணத்துக்கு என்று வயது வரம்பு இருப்பதால், மிகச் சிறிய வயதிலேயே திருமணம் செய்து கொடுப்பதும், குழந்தைத் திருமணங்களும் அறவே நின்றுவிடும் என்பது முதல் நன்மை.

முதல் மனைவி இருக்கும்போதே இன்னொரு திருமணம் செய்ய முடியாது என்பது அடுத்த நன்மை. இதனால், பெண்களின் மணவாழ்க்கை, அவர்கள் அறியாமலேயே பறிபோவதிலிருந்து காப்பாற்றப்படும். அதேபோல், மணவாழ்வில் பிரச்னை என்று வரும்போது, ‘எனக்கும் இவளுக் கும் திருமணமே நடக்கவில்லை’ என்று கணவன் பொய் சொல்லித் தப்பிக்க முடியாது.

மூன்றாவது, கணவன் இறந்தபிறகு, அவரது சொத்து மற்றும் உடைமைகள், பதிவு செய்யப் பட்ட மனைவிக்குத்தான் சட்டப்படி சேரும். எனவே, கட்டாயமாக திருமணத்தைப் பதிவு செய்திருந்தால், கணவருக்கு சட்டத்துக்குப் புறம்பான துணை இருந்தாலும், அவர்களிடம் சொத்தை இழக்காமல் காப்பாற்றிக் கொள்ள முடியும்! எனவே, ஒவ்வொரு திருமணமும் பதிவு செய்யப்படுவது மிக மிக அவசியம்’’ என்றார் ஷீலா.

திருமணத்தைப் பதிவு செய்வதற்கு அடிப்படையில் என்ன தேவை, எப்படிப் பதிவு செய்வது, எங்கு செய்வது போன்ற கேள்விகளுடன் சென்னை பதிவுத்துறை தலைமை அலுவலகம் சென்றோம். அங்குள்ள பதிவு அதிகாரி கூறியதில் இருந்து...

‘‘திருமணப் பதிவில், இந்து திருமண சட்டம், சிறப்பு திருமண சட்டம் (ஷிஜீமீநீவீணீறீ னீணீக்ஷீக்ஷீவீணீரீமீ கிநீt) என இரண்டு வகை உண்டு.

இந்து திருமண சட்டம் என்பது, இந்து மதம் மட்டுமல்லாது புத்த மதம், சீக்கிய மதம், ஜைன மதம் ஆகியவற்றையும் உள்ளடக்கியது. இந்தச் சட்டத்தில், திருமணம் வேறொரு இடத்தில் நடந்திருக்கும். அதன் பதிவு மட்டுமே அலுவலகத்தில் செய்யப்படும்.

இதற்கான தகுதிகள் என்னவென்றால், பெண்ணுக்கு 18 வயதும் ஆணுக்கு 21 வயதும் முடிந்திருக்க வேண்டும். இருவருக்குமான உறவுமுறை திருமணத் துக்கு புறம்பானதாக இருக்கக்கூடாது. இருவரில் எவருக்குமே முன்பே ஒரு திருமணம் முடிந்து, துணை இருக்கக் கூடாது.

இந்தத் தகுதிகள் இருக்கும்பட்சத்தில், மணமகன் அல்லது மணமகள் வசிக்கும் பகுதியின் எல்லைக்கு உட்பட்ட அல்லது திருமணம் நடந்த இடத்தின் எல்லைக்கு உட்பட்ட சார்&பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் வந்து திருமணத்தைப் பதிவு செய்யலாம். இதற்கான பதிவுக் கட்டணம் ஐந்து ரூபாய் மட்டுமே.

அவர்களது திருமணம், எங்காவது (கோயிலிலோ, வீட்டிலோ, மண்டபத்திலோ) எந்த முறையிலாவது (மரபு முறையிலோ, சீர்திருத்த முறையிலோ) நடந்ததற்கான ஆதாரம், பதிவுக்கு அவசியம் தேவை. அது திருமணப் பத்திரிகை, புகைப்படம் அல்லது கோயிலில் தந்த ரசீது போன்ற ஏதாவது ஒன்றாக இருக்கலாம். பதிவுக்கான விண்ணப் பத்தில் மூன்று பேர் சாட்சிக் கையெழுத்திட வேண்டும். அதே மூவர், பதிவு அலுவலகத்துக்கும் நேரில் வந்து கையெழுத்திட வேண்டும். ‘இந்தத் திருமணத்தில் வரதட்சணை வாங்கவும் இல்லை, கொடுக்கவும் இல்லை’ என்று இரு தரப்பிலிருந்தும் உறுதிமொழி தரவேண்டும். மணமக்களின் முகவரிக்கான ஆதாரமும் வயதுக்கான ஆதாரமும் அவசியம் தேவை.

பல ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆகி, பதிவு செய்யாமல் விட்டவர்களும் இதே முறையில் பதிவு செய்து கொள்ளலாம்.

அடுத்ததாக, சிறப்பு திருமண சட்டம்... எப்படிப்பட்ட ஜோடியும் (அதாவது இரு வேறு மதத்தை சேர்ந்தவர்கள் அல்லது ஒரே மதத்தை சேர்ந்தவர்கள்) இந்தச் சட்டத்தின் கீழ் திருமணத்தைப் பதிவு செய்யலாம். அவர்களுக்கு பதிவாளர் அலுவலகத்திலேயே திருமணம் நடத்தி வைக்கப்படும். பிறகு, பதிவும் செய்யப்படும்.

இந்து திருமண சட்டத்துக்கு சொன்ன அனைத்துத் தகுதிகளும் இதற்கும் இருக்கவேண்டும். கூடுதலாக, இன்னொரு விஷயமும் உண்டு. அதாவது, ‘இந்த இருவருக்கும் திருமணம் நடக்கப் போகிறது. ஆட்சேபணை உள்ளவர்கள் 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம்’ என்ற அறிவிப்பு, மணமகன், மணமகள் இருவரின் எல்லைக்குட்பட்ட சார்&பதிவாளர் அலுவலகத்தின் அறிவிப்பு பலகையில் ஒட்டப்படும். 30 நாட்களுக்குள் யாரிடமிருந்தாவது ஆட்சேபணை வரும்பட்சத்தில், திருமணம் நடத்தப்பட மாட்டாது. அப்படி எந்த ஆட்சேபணையும் வரவில்லை என்றால், 31&ம் நாளில் இருந்து 3 மாதங்களுக்குள் அவர்கள் திருமணம் முடித்து, பதிவும் செய்து கொள்ளலாம். இந்த ஆதாரங்கள், சாட்சிகள், விதிமுறைகளின்படி பதிவு செய்வதற்கான கட்டணம் பத்து ரூபாய்!’’ என்று விரிவாக சொல்லி முடித்தார் அந்த அதிகாரி.

பதிவு தொடர்பான தகவல்கள் www.tnreginet.net என்ற இணையதள முகவரியிலும் கிடைக்கிறது. பதிவு பற்றிய சந்தேகங்களை igregn@tnreginet.net என்ற மினஞ்சல் முகவரிக்கு அனுப்பினால், 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அனுப்பி வைக்கிறார்கள்.

கண்முன்னே கைமாறும் நிலத்தை வாங்குவதைகூட பதிவு செய்து வைக்கும் நாம், தலைமுறைகள் தாண்டி தொடரும் இந்த புனிதமான பந்தத்தை பதிவு செய்து வைக்க தயங்கலாமா?

0 comments: